News

ஈரானில் இராணுவ இலக்குகள் மீது “துல்லியமான தாக்குதல்களை” நடத்தி வருவதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஈரானில் இராணுவ இலக்குகள் மீது “துல்லியமான தாக்குதல்களை” நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎப்) தெரிவித்துள்ளன.



இதுதொடர்பாக தங்கள் எக்ஸ் வலைதளத்தில் வெளியாகி உள்ள வீடியோ பதிவில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.



ஈரானில் உள்ள ஆட்சியும், பிராந்தியத்தில் அதன் ஆதாரவாளர்களும் அக்டோபர் 7ம் திகதி முதல் ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர். உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது.



எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் இராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயட்டோலா அலி காமேனி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தினால், அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலால் ஈரானில் பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டால், பதிலுக்கு ஈரான் இராணுவம் மிகப்பெரிய அளவில் பதில் தாக்குதல் நடத்தும் என்றும், அதே சமயம் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கேற்றவாறு பதிலடி கொடுப்போம் என்றும் ஈரானைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button