எமது ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி இம்முறை அம்பாறையில் போட்டியிடவில்லை என்பதால் நாம் ஜனாதிபதியின் தேசிய மக்கள் சக்தி கட்சியை நிபந்தனை இன்றி ஆதரிக்க போகிறோம் ; முபாரக் மவ்லவி
திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை இத்தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு உலமா கட்சித்தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது,
கல்முனைத்தொகுதி தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கல்முனைத்தொகுதியை சேர்ந்த ஆதம்பாவா ஆசிரியர் தனது சக ஆசிரியர்களுடன் உலமா கட்சித்தலைவரை அவரின் இல்லத்தில் சந்தித்த போது எமது இந்த ஆதரவை தெரிவித்துள்ளோம்.
முஸ்லிம்களை 20 வருடமாக ஏமாற்றி, சுகபோகம் அனுபவிக்கும் முஸ்லிம் கட்சிகளை ஒதுக்கி இம்முறை புதியவர்களை பாராளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த ஆதரவை உலமா கட்சி வழங்க முன் வந்துள்ளதுடன் எமது ஆதரவின் மூலம் கல்முனை தேர்தல் தொகுதியை தேசிய மக்கள் சக்தி வெல்லும் என நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
நாம் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி இம்முறை திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடவில்லை என்பதால் எமது ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு திகாமடுல்ல மாவட்டத்தில் வழங்குவதோடு மாவட்டத்தையும் கல்முனை தொகுதியையும் தே.ம. சக்தி வெல்வதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் முபாறக் முப்தி தெரிவித்தார்.
அதே போல் தே. ம. சக்தியை ஆதரிப்பதற்கான நிபந்தனை என்றில்லாது சமூகம் எதிர் நோக்கும் பின் வரும் சில ஆலோசனைகளையும் இதன் போது உலமா கட்சித்தலைவர் முன் வைத்துள்ளார்.
கல்முனை பிரச்சினையை யாரும் பெரிதுபடுத்தி இனமுரண்பாடுகளை உருவாக்க இடமளிக்க கூடாது என்பதுடன் இனரீதியாக கல்முனையை பிரிப்பதற்கு இடமளிக்க கூடாது என்பதுடன் முடியுமாயின் கல்முனை உப செயலகத்தை ரத்து செய்து பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை இணைத்து தனியான செயலகம் தமிழ் பிரதேசத்துக்கு வழங்க முயற்சித்தல், சுதந்திரத்துக்கு பின் பேரினவாதத்தால் அபகரிக்கப்பட்ட அம்பாரை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்தல், 2010ம் ஆண்டுக்கு பின் வழங்கப்படாமல் இருக்கும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்க முயற்சித்தல், முஸ்லிம் திருமண சட்டத்தில் அரசு கைவைப்பதை தவிர்த்தல், முஸ்லிம்களை யாரும் எழுப்பி விடும் வகையில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகளை எவரும் செய்ய விடாமல் தடுப்பது.
மேற்சொன்ன ஆலோசனைகளை தே.ம. ச கல்முனைத்தொகுதி வேட்பாளர் ஆதம்பாவா ஆசிரியர் ஏற்றுக்கொண்டதோடு தான் பதவிக்கு வந்ததும் தன்னாலான முயற்சிகளை செய்வதாகவும் கூறியுள்ளார்.
இதன்படி அவருக்கும் தே.ம. சக்திக்குமான தமது முழு ஆதரவையும் வழங்குவதாகவும் கல்முனைத்தொகுதியிலும் திகாமடுல்ல மாவட்டத்திலும் NPP வெல்வதற்கு முழு முயற்சியும் எடுப்பதாக உலமா கட்சித்தலைவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
ஸ்ரீ லங்கா உலமா கட்சி.
6.11.2024