தமிழ் முற்போக்கு முன்னணி மாதர்பிரிவு பாரத் அருள்சாமிக்கு ஆதரவு
கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடும் பாரத் அருள்சாமிக்கு பூரண ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு முன்னணியின் மாதர் பிரிவு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கண்டி கட்டுகாஸ்தோட்டை வீதியில் அமைந்துள்ள பாரத் அருள்சாமியின் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இதுதொடர்பில் தமிழ் முற்போக்கு முன்னணியின் கண்டி மாவட்ட மாதர் பிரிவின் அக்குறணை – ஹாரிஸ்பத்துவ பிரதேச அமைப்பாளரான கே. விஜயா கருத்து தெரிவிக்கையில்,
மத்திய மாகாண சபையின் தமிழ் கல்வி அமைச்சராகவிருந்த அமரர் அருள்சாமி கல்வி அபிவிருத்திக்கு மத்திய மாகாணத்தில் அரும்பாடுபட்டவர்.
அதிக காலம் சேவை புரிந்த அவர் கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப் பாடசாலைகளின் மனித வள அபிவிருத்தி மற்றும் பௌதீக வள அபிவிருத்தி ஆகிய இரண்டு துறைகளையும் திறம்படச் செய்தார். அவரது புதல்வரான பாரத் அருள்சாமி மாகாண சபையிலோ, பிரதேச சபையிலோ எதிலும் ஒரு உறுப்பினராக இல்லாமல் பல்வேறு சேவைகளை பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுத்துள்ளார். எனவே சட்டத்தரணியான அவரது சேவைகள் மலையகத்திற்கு மிக முக்கியமானதாகவுள்ளது. அந்தவகையில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களில் பாராளுமன்றம் செல்வதற்கு மிகவும் பொருத்தமான நபர் பாரத் அருள்சாமியே. அதனடிப்படையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.