அப்துல் ரவுப் மௌலவி திசைக்காட்டிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.

அப்துல் ரவுப் மௌலவி திசைக்காட்டிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கைக்கு எட்டிய மாற்றத்தை தக்க வைப்போம்! இன்றேல் வாய்க்கெட்டாத கதை போலாகிவிடும்!
மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய வாக்காளப் பெருமக்களே! எனது தலைமத்துவத்தை ஏற்று செயல்படும் ஸுபிஸ் சமூகமே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்!
எமது தாய்த்திரு நாட்டின் 17வது பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி | நடைபெறவுள்ளது.
196 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இத்தேர்தலில் நாடு பூராகவும் 8821 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 04 பேர் தெரிவு செய்யப்படுவதுடன், போனஸ் ஆரவமாக ஒன்றும் வழங்கப்பட்டு மொத்தம் 05 பேர் நாடாளுமன்றம் செல்வர்.
ஓவ்வோர் அரசியல் கட்சியிலும் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் எவ்வாறேனும் தாம் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காக பல்லின மக்கள் வாழும் இம் மாவட்டத்தில் இளவாதத்தையும், பிரதேச வாதத்தையும் தமது மூலதனமாக கொண்டு மேடைப் பிரச்சாரங்கள் செய்வது வழக்கம்.
அயலூரிலுள்ள சகோதரர்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும். நமதூர் மக்கள் அயலூர் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் “ஊருக்கு எம், பி வேணும்” என்ற கோஷத்தை முன் வைத்து அதைத் தடுக்க முயற்சிப்பார்கள். இந்நிலை ஒவ்வோர் இனத்தையும் பிரதிபலிக்கும் விதத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளின் வழக்கமாக அன்று முதல் இன்று வரை இருந்தே வருகிறது.
இவ்வாறான சூழலில் பல தசாப்த போராட்டத்தின் பின் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை எதிர்பார்த்திருந்த நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய தோழர் அநுர குமார திஸாநாயக அவர்களை ஜனாதிபதியாகத் தெரிவு செய்து மேற்குறித்த இனவாத, பிரதேசவாதத்தை கக்கும் கட்சிகளின் தலைமகளை திணற வைத்துள்ளனர்.
அன்பிற்குரியவர்களே!
நானும், எனது தலைமையில் இயங்கும் ஸூபிஸ சமூகமும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் எவ்வித சொந்த எதிர்பார்ப்புமின்றி தோழர் அநுர குமார திஸாநாயக அவர்களின் “தேசிய மக்கள் சக்தி”யை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளோம். அதற்குப் பிரதான காரணம் என்னவெனில் ஏனைய அரசியல் கட்சிகளின் கொள்கைகளை விட்டும் இவர்களின் கொள்கை வேறுபட்டு காணப்படுவதேயாகும்.
என்னைக் கவர்ந்த அவர்களின் கொள்கை கோட்பாடுகளிற் சிலதை இங்கு குறிப்பிடுகிறேன்.
01. பொய்யான வாக்குறுதிகள் இல்லை.
02. ஊழல் அற்ற மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறை.
03. ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் அரச பணத்தில் – பொது மக்களின் வரிப் பணத்தில் சொகுசு வாழ்வு வாழ்வதை தடுக்கும் உறுதி மொழி.
04. தமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து மக்களையும் “இலங்கையர்” என்ற கண்ணோட்டத்தில் ஒன்றாகவே பார்த்தல்.
05. மக்கள் சேவையை வழங்கும் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களின் சேவையில் அரசியல்வாதிகளின் தலையீட்டை இல்லாதொழித்தல்.
06. எவர் எம்மதத்தை. எக் கொள்கையைப் பின்பற்றினாலும் அது அவரவர் விசுவாசமாகும். ஏனையவர்கள் தாம் விரும்பும் மதத்திற்கு அல்லது கொள்கைக்கு அவர்களை பலாத்காரப்படுத்தி இழுக்கும், அல்லது அவர்களை இம்சிக்கும் அடிப்படைவாதத்தை முற்றாக இல்லாதொழித்தல் .
இன்னும் பல.
நமது வளமான நாட்டின் வளங்களை சுரண்டி தாமும், தமது குடும்பமும், தமது ஆதரவாளர்களும் சுகபோக வாழ்வு வாழ்ந்த அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் கொள்கையுடைய அரசியல் கட்சியே “தேசிய மக்கள் சக்தி”யாகும்.
அன்பிற்குரிய இஸ்லாமிய வாக்காளப் பெரு மக்களே!
இந்தியாவின் குட்டி காயல்பட்டணம் என்று அனைவராலும் புகழ்ந்துரைக்கப்பட்ட எமது காத்தான்குடியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்த அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஆன்மிக ரீதியாக அடிப்படைவாதிகளைக் கொண்ட ஊர் என்று எமதாரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தவர்களின் இழி செயலுக்கு முற்றுள்ளி வைக்கவும் இம்முறை தேர்தலில் “தேசிய மக்கள் சக்தி”க்கு வாக்களிப்போம். இன்ஷா அல்லாஹ்!
நன்றி, வஸ்ஸலாம்.
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி
காத்தான்குடி 05.
02.11.2024

