News

விரைவில் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

நடத்த முடியுமான குறுகிய காலத்திற்குள் விரைவில் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் இன்று(17) இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். 

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக களமிறங்குவாரென இந்த கலந்துரையாடலின் பின்னர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். 

இதனிடையே, தேசிய ரீதியிலான தேவையொன்று காணப்படுவதன் காரணமாகவே ஜனாதிபதி கட்சியின் சின்னத்தில் போட்டியிடவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கூறினார். 

முழு நாடும் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில், பாராளுமன்றத்தில் தேசிய சபையொன்று ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அந்த தேசிய சபையில் இருந்து உருவாகியுள்ள வேட்பாளரே ரணில் விக்கிரமசிங்க எனவும் அவர் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button