News

விருப்பு வாக்கு வேட்டையில் மட்டரகமான பிரதேசவாத, ஊர்வாத ஊடுறுவலின் பின்விளைவுகளை கிழக்கு மாகாணத்தில் கற்கலாம்.

கொழும்பு, கண்டி, கேகாலை, புத்தளம், மாத்தறை, கம்பஹா, குருநாகல் என பல பகுதிகளிலும் சமூக மற்றும் தேசிய சகோதரத்துவ வாஞ்சை எவ்வாறான முடிவுகளை தந்திருக்கிறது என்பதில் அறிவுள்ளவர்களுக்கு படிப்பினை இருக்கிறது.

வடக்குத் தமிழ் சமூகம் மாத்திரமல்லாது, சுற்று வட்டாரங்களில் உள்ள சிங்கள சமூகத்திடம் கால்மடித்து நாம் அரசியல் பாடம் கற்க வேண்டி உள்ளது.

நாட்டில் வரலாறு காணாத புரட்சிகரமான அரசியல் பிரளயம் ஏற்பட்டு மூன்றில் இரு பாராளுமன்ற பெரும்பான்மை ஆளுந்தரப்பிற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் எமது ஊர்வாத ஜாஹிலிய்யத்தின் காரணமாக ஒரு மாகாணமே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளமை குறித்து நாம் கூடி ஆராய வேண்டியுள்ளது.

இலங்கை முஸ்லிம் அரசியலின் (ஒடிந்த) முதுகெழும்பு தாயகம், தனித்துவ அடையாள அரசியலின் அதிமுக்கியமான பிராந்தியமாக கருதப்படும் கிழக்கு மாகாணத்தில் இந்நிலை ஏற்பட்மை ஆழமான வடுக்களை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் அகத்திலும் ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அரசியல் பிரவாக மைய நீரோட்டத்தில் தம்மை சாணக்கியமாக தகவமைத்துக் கொள்ளத் தெரியாத அரசியல், சிவில், சன்மார்க்கத் தலைமைகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

தேசிய அளவில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து அரசியல் கலாசாரத்திற்கு விழிப்புணர்வு கிழக்கிலும் ஏற்பட்ட போதும் அங்கு ஊட்டி வளர்க்கப்பட்டுள்ள கன்ஸர் போல் வேறூன்றியுள்ள ஊர்வாதத்தை உதரித் தள்ள முடியாமை வேதனை தரும் விடயமாகும்.


அது தேசமோ சமூகமோ வரலாறு காணாத அரசியல் சமூக பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள ஒரு கால கட்டத்தில் எமது அதிகப்பிரசங்கித் தனத்தினால், அரைவேக்காட்டுத் தனத்தினால், ஊர்வாத, தொகுதிவாத ஜாஹிலிய்யத்தினால் நாம் இழந்து நிற்கும் பிரதிநிதித்துவங்களுக்கு தேசியத் தலைமையிடம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாற்றீடூ கேட்டு மன்றாடுவது என்பது புரியவில்லை!

என்றாலும், அதிக வாக்குகளைப் பெற்று விளிம்பு நிலையில் தோல்விகண்ட ஒரு பிரதிநிதிதியை அல்லது தேசியப்பட்டியலில் ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர் இக்ராம் அவர்களையாவது இந்த மூன்று மாவட்டங்களுக்குமான பிரதிநிதியாக தருமாறு  தலைகுனிவுடன் தேசிய மக்கள் சக்தியின் தலைமையை கேட்டுக் கொள்கிறோம்!

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍️ 16.11.2024 ||

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button