ஜனாதிபதிக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. மக்கள் எதிர்பார்ப்புக்களை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம் ; ரிஷாத் பதியுதீன்
க. அகரன்
வடக்கு – கிழக்கு சார்ந்த மக்கள் ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே ஜனாதிபதிக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது என றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
தனது வெற்றி குறித்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னி மாவட்டத்தில் 06 பாராமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி தலைமையிலான கட்சி போனஸ் ஆசனம் உட்பட இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை பெற்று, மாவட்டத்தில் அதிகூடிய வாக்கை வன்னி மக்கள் எனக்கு வழங்கியுள்ளார்கள். எமது கட்சியில் போட்டியிட்ட அனைவரதும் அயராத முயற்சி தான் இந்த வெற்றிக்கு காரணம். மாவட்ட மக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.
வன்னி மாவட்ட மக்களுக்கான பணியை நான் தொடர்ந்தும் முன்னெடுப்பேன். அதுபோல் அம்பாறை மாவட்டத்தில் எனது கட்சி தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. அந்த மக்களுக்கும் எனது நன்றிகள். புத்தளம், அனுராதபுரம், குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் எமது கட்சிக்கு மக்கள் வாக்களித்தாலும் வெல்ல முடியவில்லை. அந்த மக்களுக்கும் எனது நன்றிகள்.
தேர்தலுக்கு பின் எனது பணி முன்னர் செய்ததை விட அதிகமாக இருக்கும் என்பதை கூறிக் கொள்கின்றேன். இந்த தேர்தல் ஒரு புதிய செய்தியை சொல்லியிருக்கிறது. நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு ஜனாதிபதியையும், ஜனாதிபதியின் கட்சியையும் வெல்ல செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக வடக்கு – கிழக்கு மக்கள் கூட இந்த ஜனாதிபதியை சார்ந்த கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே ஜனாதிபதிக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. மக்கள் எதிர்பார்ப்புக்களை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம். அத்துடன் ஜனாதிபதிக்கும், அவரது கட்சிக்கும், புதிய உறுப்பினர்களும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.