வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவமற்ற அமைச்சரவையை நிறுவியமை 🧭 தோழர்கள் விட்ட முதலாவதும் பாரதூரமானதுமான அரசியல் இராஜதந்திர தவறாகும்
முதலாவதாக இது பல்லின பலமத பல மொழி பலகலாசார பண்புகளைக் கொண்ட தேசம் என்பதனைப் பிரதிபலிக்கும் அரசியலமைப்பை அரசை அரச யந்திரத்தை கொண்டிருக்க வேண்டிய தேசம் என்பது அரசியல் அரிச்சுவடிப் பாடமாகும்.
அத்தகைய அடிப்படைப் பண்புகளுக்கு மதிப்பளிப்பது அறிவியல், உளவியல், சமூகவியல், விஞ்ஞான, நிபுணத்துவ அடிப்படைகளுக்கு புறம்பானதென எவரேனும் அதிகப்பிரசங்கித் தனமாக நியாயப்படுத்தினால் அவர்களது அறிவியல் நிபுணத்துவ தராதரங்களை மீள்பரிசீலனை செய்தல் வேண்டும்.
இனவாதம், மொழிவாதம், மதவாதமில்லாத இலங்கையர் நாம் என்ற அடையாளத்தை முன் வைத்து சகல சமூகங்களுக்கும் பொதுவான சவால்களுக்கு ஓரணி நின்று முகம் கொடுத்தல் என்பது சமூகம்சார் தனித்துவங்களை சமரசம் செய்து கொள்வதல்ல என்பதனை நாம் புரிந்து கொள்தல் வேண்டும்.
இனவாதம், மொழிவாதம், மதவாதம், பிரதேசவாதம் வேறு சமூகங்களின் இனத்துவ உரிமைகளை அடையாளங்களை அவற்றிற்கான அங்கீகாரங்களை, நியாயமான பிரதிநிதித்துவங்களை தக்கவைத்துக் கொள்வது என்பது வேறு என்பதனை எமது தோழமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதனைப் புரிந்து கொள்ள நாம் சமூகங்களாகவும் தேசமாகவும் கொடுத்த பாரிய விலைகளின் பின்விளைவுகளே எமது தாய்நாட்டை இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்பதனை நாம் அறிவோம், சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றை மீள எழுத முன்வந்துள்ள நாம் அதே ஆரம்பப் புள்ளிகளில் மீண்டும் சங்கமம் ஆகி விடலாகாது.
ஒரு தேசத்தில் அமைதி சமாதானமும் சகவாழ்வும் நிலவினால் மாத்திரமே அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட முடியும் அதன் அடிப்படையிலேயே பொருளாதார சுபீட்சம் ஏற்பட முடியும், அதுவே சர்வதேச அளவில் அரசியல் சாசனங்களின் அடிப்படை சித்தாந்தமாகும்.
இத்தகைய அடிப்படை பண்புகள் இல்லாது போகின்ற பொழுது அந்த இடைவெளிகளூடாக தேசிய பிராந்திய சர்வதேச சதிகார சக்திகள் ஊடுருவி தலையீடுகளை மேற் கொண்டு தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கும், மேலாதிக்க போட்டிகளுக்கும் கூலிப்படைகள் கொண்டு சதித்திட்டங்களை தீட்ட முனைகின்றன, அது இன்று ஒரு தேசமாக எமக்குப் புதிய விடயமல்ல.
ஒரு தேசமாக 2015 ஆம் ஆண்டு அழிவின் விளிம்பில் இருந்து நாம் எழுந்து நிற்க முனைந்த பொழுது, வங்குரோத்து நிலையில் இருந்து மீள எத்தனித்த பொழுது எத்தகைய சதித்திட்டம் 2019 இல் அரங்கேறியது என்பதனையும் தொடர்ந்து சுனாமிபோல் எம்மைக் காவிக் கொண்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளையும் நாம் நன்கு அறிவோம்..
அதன் விளைவாக நாம் ஒரு தேசமாக மக்கள் எழுச்சியிற்கு முகம் கொடுத்தோம், அரகலய எனும் மக்கள் எழுச்சியின் ஜனநாயக பரிமாணங்களுக்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியேயும் உருக் கொடுத்த தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்தி அதன் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு தந்தோம்..
தேசிய மக்கள் சக்தியின் மீதும் அதன் தலைமை மீதும், குறிப்பாக ஜனாதிபதி தோழர் அநுர மீதும் நாம் வைத்துள்ள நம்பிக்கை கிஞ்சித்தும் பழுதடைந்து விடக்கூடாது, சர்வதேச சமூகத்தில் குறிப்பாக அரபு முஸ்லிம் உலகில் அது ஒரு கேள்வியாக இருக்கக் கூடாது என்பதில் அதன் ஆதரவாளர்களாக செயற்பட்ட தொண்டர்களும் தோழர்களுமாக நாம் உறுதியாகவே இருக்கின்றோம், அத்தகைய திடமான நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
உரிமைகளுக்கான, அடிப்படை உரிமைகளுக்கான ஜனநாயக அரசியல் போராட்ட வடிவங்கள் என்றவகையில் அதன் மைய நீரோட்டத்தில் இணைந்து கொண்டு எமது நியாயமான மனக்குறைகளை அபிலாஷைகளை அடைந்து கொள்ளவே நாம் ஒரு சமூகமாகவும் தேசமாகவும் அணிதிரண்டிருக்கிறோம்.
“நாம் ஆட்சிக்கு வர முன் எமக்கு ஒரு அரசியல் இயக்கமாக முன்னுரிமைகள் கடப்பாடுகள் இருந்தன, ஆனால் இன்று மக்கள் ஆட்சியை எம்மிடம் தந்துள்ளார்கள், மூன்றில் இரு பெரும்பான்மையையும் தந்துள்ளார்கள், தற்போது ஒரு அரசாங்கமாக எமது முன்னுரிமைகள் கடப்பாடுகள் பற்றி நாம் ஒட்டு மொத்த தேச மக்களுக்கும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்”
என ஜனாதிபதி தோழர் அநுர வலியுறுத்தியது போல் இந்த தேசத்தின் இறுதி எதிர்பார்ப்பாக அமைந்துள்ள இந்த தேசிய ஒருமைப்பாட்டு அரசு முன்நோக்கி நகரும் என்ற நம்பிக்கையில் அதனை பாதுகாக்கவும் நாம் ஒரு தேசமாக ஒன்றினைந்து பயணிப்போம்.
புதிய அமைச்சரவையில் இன்று எமது பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்ற பிந்திய தகவலுக்கு நன்றி கூறி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து புதிய அமைச்சர்களுக்கும் எமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 18.11.2024 || SHARE
முன்னாள் பொதுச் செயலாளர் தேசிய ஷூரா சபை
முன்னாள் ஸவூதி அரேபிய ஜித்தா நகரிற்கான கொன்ஸல் ஜெனரல்
முன்னாள் அரசியல் நிபுணத்துவ ஆய்வாளர் ஸவூதி மற்றும் கத்தார் தூதரகங்கள்.
முன்னாள் கொன்ஸுலர் அதிகாரி குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தூதரகங்கள்.