தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஹிருனிக்காவுக்கும் தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் ; ஹர்ஷ டி சில்வா
ஐக்கிய மக்கள் சக்திக்காக கடுமையாக உழைத்த எரான் விக்கிரமரத்ன, ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோர் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளினாலேயே தோல்வியடைந்தார்கள். எனவே இவர்களுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கிறோம் என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பிரச் சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். கட்சிக்காக கடுமையாக உழைத்த எரான் விக்கிரமரத்ன, ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோர் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளினாலேயே தோல்வியடைந்தார்கள். இவர்களுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கிறோம்.
ஜனாதிபதியின் உரையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனையே நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறோம்.
வெளிவிவகார கொள்கை தொடர்பில் ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் தெளிவாக குறிப்பிடவில்லை. ஆகவே இது சற்று அவதானிக்க கூடிய விடயம். அரசாங்கம் எவ்வகையான வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்கவுள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றார்