“சிங்கள மக்களின் வாக்குகளால் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதென்பது ஒரு புதிய விடயமல்ல”
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுவது போன்று,
“சிங்கள மக்களின் வாக்குகளால் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதென்பது ஒரு புதிய விடயமல்ல”
முஸ்லீம் அமைச்சர் நியமனம் தொடர்பான விடயத்தை தொடர்புபடுத்தி அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ள விடயங்களை அவதானித்தால் ,
* மேல்மாகாணத்தில் முஸ்லீம் ஆளுனரை நியமித்துள்ளோம்.
* பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சராக முஸ்லீம்களை நியமித்துள்ளோம்.
என்று கூறிவிட்டு கம்பஹாவில் முஸ்லீம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார், அம்பாரையில் தேசியப்பட்டியல் மூலம் ஒருவரை தெரிவு செய்துள்ளோம். அதனால் முஸ்லீம்கள் ஒரேநாட்டவராக இதனை பார்க்கவேண்டும் என்று.
முஸ்லீம் அமைச்சர் நியமனமத்தில் ஏற்பட்ட அநீதியை நியாயப்படுத்துவதற்கு NPP யினர் பல காரணங்களை தேடுவது போல்தான் உள்ளது.
நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் கருத்தின் பிரகாரம் கம்பஹாவில் முஸ்லீம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டதற்கு சிங்கள வாக்குகள் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தவிடயம் இன்று ஒரு புதியவிடயமில்லை. ஏனென்றால் இதற்கு முன்பு கடந்த காலங்களிலும் இம்முறையும் ACS.ஹமீட், கபீர் ஹாஸிம், இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் போன்றவர்களுக்கு இன்றும் சிங்கள மக்கள் வாக்குகளை அளித்துவருகின்றார்கள்தானே.
தேசியப்பட்டியல் என்பது அந்தந்த கட்சிகளுக்கூடாக அந்த கட்சிக்காரர்களுக்கு வழங்கப்படுகின்ற கட்சிசார்ந்த ஒரு விடயம் இதனைத்தான் நளிந்த அவர்கள் குறிப்பிடும் போது அம்பாரையில் முஸ்லீம் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று. அம்பாரையில் மிக அதிகமாக வழங்கப்பட்ட முஸ்லீம் வாக்குகளால் கூட NPP யிலிருந்து முஸ்லீம் ஒருவர் தெரிவாகியிருக்கவில்லை அம்பாரையில் 70,000 க்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகள் மூலம் 4 NPP சகோதர இனத்தைச் சேர்ந்த சிங்கள சகோதரர்கள் தெரிவாகியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.இதற்காக கட்டாயம் NPP தேசியப்பட்டியலை வழங்க வேண்டிய தேவை இருந்ததே தவிர திறமையான முஸ்லீம் ஒருவரை தெரவுசெய்ய வேண்டும் என்று நோக்கில் கிடையாது.
ஏனென்றால் NPP யின் வேட்பாளர் தெரிவு கூட JVP கட்சி சார்பானவர்களுக்கே வழங்கப்பட்டிருந்ததே தவிர பல திறமையானவர்களை முஸ்லீம் சமூகத்திலுள்ள NPP ஆதரவாளர்கள் பலர் முன்மொழிந்திருந்தும் அவ்வாறானவார்களை பல பிரதேசங்களில் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கவுமில்லை.
இதற்கு முன்னர் தேசிய கட்சிக்கூடாக 2015 ம் ஆண்டு MLAM.ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற வரலாறும் இருக்கிறது.
இதற்கு முன்னர் NPP யினர் நளிந்த ஜயதிஸ்ஸ உட்பட பலரும், களுத்துறை மாவட்ட தேர்தல் பிரச்சாரங்களின் போது முஸ்லீம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூறி முஸ்லீம்களை வேண்டிக் கொண்டுமிருந்தனர். இன மத பேதங்கள் இல்லையென்றால் முஸ்லீம் வேட்பாளர்களுக்கு முஸ்லீம்கள் வாக்களியுங்கள் என்று கூறத் தேவையில்லையே மாறாக ஒரே நாட்டவர்களாக எல்லோரும் வாக்களியுங்கள் என்று கூறியிருக்கலாமே.
ஆகவே NPP யாக நீங்கள் இவ்வாறான நியாயப்படுத்தல் காரணங்களை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு தகுதியானவர்கள்,அனுபவமுள்ளவர்கள் என்ற ரீதியில் எங்கள் கட்சிக்குள் நாங்கள் தெரிவு செய்த பொருத்தமானவர்களுக்கு அமைச்சுக்களை வழங்கியுள்ளோம் என்று முற்றுப்புள்ளி வைத்து அமைச்சரவை விடயத்தை நிறைவு செய்துகொள்வதுதான் சிறப்பானதாகும்.
MLM.சுஹைல்