குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இக்ரஃ இஸ்லாமிய சங்கம் பிரியாவிடை..
குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் அவர்கள் குவைத் நாட்டில் தமது பணிகளை நிறைவு செய்து கொண்டு விரைவில் தாய் நாடு திரும்ப உள்ளார்கள். நாடு திரும்ப இருக்கும் கௌரவ தூதுவர் அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நோக்கில் இக்ரஃ இஸ்லாமிய சங்கம் ஒரு சினேக பூர்வ சந்திப்பை மேற்கொண்டிருந்தது. அதில் சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் முஹம்மத் பைஸல் (நஜாஹி) , செயலாளர் ஹரீஸ் ஸாலிஹ் மற்றும் சங்கத்தின் மூத்த நிர்வாக சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் மன்சூர் இஸ்மாயில் (நளீமி) ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்படி சந்திப்ப குவைத் இலங்கைத் தூதரகத்தில் தூதுவரின் அலுவலகத்தில் 25.11.2024 தினம் இடம்பெற்றது.
இக்ரஃ இஸ்லாமிய சங்க நிர்வாகக் சபை உறுப்பினர்கள் சார்பாக, எங்களைச் சந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்கிய கௌரவ தூதுவர் அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. குவைத்தில் அவர்களது இரண்டு தவணை காலத்திலும் குவைத் வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவும் விலைமதிப்பற்ற ஆலோசனைகளும் பெரிதும் பாராட்டப்பட்டது.
கடந்த சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இக்ரஃ இஸ்லாமிய சங்கம் குவைத் வாழ் இலங்கை மக்களுக்கு ஆற்றி வரும் சேவைகளைப் தூதுவர் அவர்கள் பாராட்டினார்கள். சங்கத்தின் முயற்சிகள் நமது சமூகத்திற்கும் நமது நாட்டிற்கும் உள்ள பிணைப்பை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது என்வும் கூறினார்கள். குவைத் வாழ் இலங்கை சமூகங்களுக்கிடையேயும் இலங்கையிலும் சக வாழ்வு, நல்லிணக்கம், சமாதானம் மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதற்கான வேலைத் திட்டங்களை இக்ரஃ இஸ்லாமிய சங்கம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதற்கான சில வழிகாட்டுதல்களையும் தந்து ஊக்கமளித்தார்கள்.
அதே போல் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் முன்முயற்சிகள் மற்றும் புதிய ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் சங்கத்தை வேண்டிக் கொண்டார்கள்.
கௌரவ தூதுவர் அவர்களது விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கும் தலைமைத்துவத்திற்கும் மீண்டும் ஒருமுறை எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு உங்களது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.
இக்ரஃ இஸ்லாமிய சங்கம், குவைத்
28.11.2024