“மாவடிப்பள்ளி விபத்து சம்பவமானது, நாட்டிலுள்ள அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.”
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)விடுக்கும் இரங்கற் செய்தி.
நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பாரிய வெள்ள அனர்த்தத்தினால் நாட்டில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,
பல உயிர்களும் காவு கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மாவடிப்பள்ளி டிராக்டர் விபத்தில், உயிர் இழந்த மத்ரஸா மாணவர்களின் மரணமானது,முழு நாட்டு மக்களையுமே மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பல்வேறு வாதப் பிரதி வாதங்களும், கருத்துக்களும் தொடர்ச்சியாக பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சில கருத்தாடல்கள் ஆக்கபூர்வமான கருத்தாடல்களாக இருந்த போதிலும் பெரும்பாலான பதிவுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் வகையிலான பொறுப்புக்கூறலற்ற பதிவுகளாகவே உள்ளன.
நடந்து முடிந்த விபத்தானது, ஒரு பாரிய அனர்த்தத்தின் காரணமாக நிகழ்ந்திருக்கின்ற போதிலும், இதனை இறைவனின் நாட்டம் என நம்பி ஏற்றுக்கொள்வது முஸ்லிம்களாகிய எமது கடமையாகும்.
அத்துடன் இவ்விபத்தினை துயர் நிறைந்த ஒரு பாடமாக நாம் எடுத்துக்கொண்டு, விபத்து இடம்பெற்றமைக்கான உண்மையான காரணங்களை கண்டறிதல் வேண்டும்.ஆதாரமற்ற, பக்கச்சார்பான பொய்யான தகவல்களை பகிர்வதனையும் முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும். விபத்து நடைபெறாமலிருக்க முன் எச்சரிக்கையாக நாம் மேற்கொண்டு இருக்க வேண்டிய விடயங்களை கலந்துரையாடி உடனடியாக அவற்றை நடைமுறைப்படுத்த துறைசார் நபர்களுக்கு அழுத்தங்களை வழங்கவேண்டும்.
எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறான இள வயது மரணங்கள் என்பது பெற்றோர்ளையும் உறவினர்களையும் மிகவும் கவலைக்குட்படுத்தக் கூடிய விடயமாகும்.
எனவே உயிரிழந்த அனைவருக்கும் நாம் இறைவனிடத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸினை வழங்க பிரார்த்திப்பதோடு அவர்களை இழந்து தவிக்கின்ற அவர்களுடைய பெற்றோர்கள், குடும்பத்தினர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இறைவன் நிரப்பமான பொறுமையை வழங்க வேண்டுமெனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக பிரார்த்திக்கின்றோம். இழப்பால் துயருறும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் நடந்து முடிந்துள்ள விபத்தினை காரணம் காட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை விடுத்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விபத்து ஒன்று நடைபெறாமல் தடுப்பதற்காக சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதே விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான மரியாதையாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
-ஊடகப் பிரிவு-