News

இந்த அரசாங்கம் வந்ததன் பிற்பாடு, ஏற்பட்ட மிகப்பெரிய அனர்த்தமே    அண்மையில் ஏற்பட்டது 

ஊடகப்பிரிவு –

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அனர்த்த நிலைமைகள் தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்தில் (04) முன்வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

“கடந்த சில நாட்களுக்கு முன்னர், வங்கக்கடலில் ஏற்பட்ட “பெங்கள்” சூறாவளி காரணமாக, நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட சுமார் 24 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இந்த இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது சமீபகால வரலாற்றில் பதிவான மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் ஆகும்.

இதன் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் நெற்செய்கை உட்பட உணவுப் பயிர்கள் மற்றும் பாரிய விவசாய நிலங்களும் சேதமாகியுள்ளன. விவசாயத்தை தங்களின் வாழ்வாதாரமாகக்கொண்ட விவசாயிகள், இதன் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோசமான இந்த காலநிலை சம்பந்தமாக, 17 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று, நிந்தவூர், மதரஸாவைச் சேர்ந்த 11 மாணவர்கள் பயணித்த உழவு இயந்திரம், காரைதீவு – மாவடிப்பள்ளி பாலத்திற்கருகில் விபத்துக்குள்ளானதில், எட்டு உயிர்கள் பலியாகின.

எனவே, வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சொத்துச் சேதம், உயிர்ச்சேதம் ஆகியவற்றுக்கு அரசாங்கத்தினால் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இந்தப் பிரேரணையை  முன்வைத்து, சபை ஒத்திவைப்பு விவாதத்தை ஆரம்பித்து வைக்கின்றேன்.

சபைக்கு தலைமை தாங்குகின்ற சபாநாயகர் அவர்களே,
இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெறவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், சில அரச அதிகாரிகள் சிறந்த முறையில் செயற்பட்டதனால், குறிப்பிட்ட மாவட்டங்கள் அனர்த்தங்கள் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று, சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால், பாரிய சேதங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை, இந்த உயர் சபையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த அரசாங்கம் வந்ததன் பிற்பாடு, ஏற்பட்ட மிகப்பெரிய அனர்த்தமாக இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

அந்தவகையில், அம்பாறை மாவட்டத்தில், நிந்தவூர் மதரஸா மாணவர்களின் இழப்பு தொடர்பில், குறிப்பிட்டாக வேண்டும். குறித்த மதரஸாவிற்கு நான் நேரில் விஜயம் சென்று பார்வையிட்டேன். மதரஸாவில் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால்தான், மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவர்கள் பாதுகாப்பாக பஸ்ஸில்  அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்கள். எனினும், பஸ் பயணிக்க முடியாத காரைதீவு – மாவடிப்பள்ளி பாலத்தின் ஊடாக செல்வதற்கு, குறித்த மாணவர்கள் உழவு இயந்திரத்தில் அனுப்பப்பட்டபோது, பொலிஸார் பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றார்கள். இம் மாணவர்கள், அந்தப் பாதையில் பயணிப்பதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர், ஏற்கனவே, ஒரு உழவு இயந்திரத்தில் அந்தப் பாலத்தின் ஊடாக பயணித்தவர்கள், கீழே வீழ்ந்து பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறான சம்பவங்கள், அந்த இடத்தில் இடம்பெற்றுள்ளது என்பது தொடர்பில், பின்னர் சென்ற குறித்தமாணவர்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை. இந்த விடயங்களை பொலிஸார் அறிந்திருந்தும், அதனை தெரியப்படுத்தாமல் மேற்படி பாதையால் பயணிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த விடயத்தில், பொலிஸாரும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளும் சிறுபிள்ளைத்தனமாக செயற்பட்டிருக்கின்றார்கள். மேலும், இந்த சம்பவம் இடம்பெற்றபோது, அங்கிருந்தவர்கள் பிள்ளைகளை காப்பாற்றித் தருமாறு கூக்குரலிட்டுள்ள போதும், அங்கு நின்றிருந்த பொலிஸார், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்து, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இவ்வாறானதொரு அனர்த்தம் நிகழும் பட்சத்தில், அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், அங்கு வருகை தந்த பொலிஸார், பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு அளிக்குமாறு கூறியிருக்கின்றார்கள். பொலிஸ் நிலையத்திற்குச் சென்றும் கூட, ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக முறைப்பாடு செய்வதற்கு காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், மறுதினம் குறித்த மதரஸா அதிபரையும் ஒரு சிலரையும் சிறைக்கு அனுப்பும் வேலையை செய்திருக்கின்றார்கள்.

மரணம் என்பது இறைவனின் நாட்டப்படி நிகழ்வது. என்றாலும், இவ்வாறான ஆபத்துக்களை தடுக்க வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்துக்கு, அதிகாரிகளுக்கு, மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நம் அனைவருக்கும் இருக்கின்றது.

எனவே, இனிமேலும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கான, முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அத்துடன், இந்த சம்பவத்திற்குப் பின்னால் உள்ள அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அதேபோன்று, இந்த அனர்த்தத்தினால், நாடு முழுவதிலும் 17க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் உறவினர்களுக்கும் எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.

மேலும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மன்னார் மாவட்டம், இம்முறை வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 19 ஆயிரத்து 811 குடும்பங்களை சேர்ந்த, 68,334 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட சிறிய குளங்கள் சேதமடைந்துள்ளன. 7500 ஹெக்டேயர் வேளாண்மை செய்த காணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 91 km சிறிய பாதைகள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான  கால்நடைகள் அழிந்துபோயின.

எனவே, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமானத்துடன் அவர்களுக்கான நஷ்டஈடுகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். 

அதேபோன்று,  வவுனியா மாவட்டத்தில், 161 சிறு குளங்கள் சேதமடைந்துள்ளன. 6000 ஹெட்டேயர் விவசாய நிலப்பரப்பு சேதமாகியுள்ளன. இதேவேளை, வவுனியா தெற்கு பிரதேசத்தில் ஒரு மரணம் பதிவாகி இருக்கின்றது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் 3099 குடும்பங்களைச் சேர்ந்த 9398 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பல சிறிய மதகுகள், பாதைகள், விவசாய நிலங்கள், கால்நடைகள் என்பனவும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில்,  4249 குடும்பங்களைச் சேர்ந்த 12654 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பகுதி அளவில் 89 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் 23561 குடும்பங்களைச் சேர்ந்த 73532 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 129 வீடுகள் பகுதி அளவிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில், 5000 க்கு மேற்பட்ட ஹெட்டேயர் விவசாய காணிகள் சேதமாகியுள்ளன. மீனவர்கள் பல நாட்களாக தொழிலுக்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படாமல் கஷ்டப்படுகின்றார்கள். மேலும், அந்த மாவட்டத்தில் உள்ள குளங்கள் தற்பொழுது சேதமாகியுள்ளதால், விசேட நிதியை ஒதுக்கீடு செய்து, குளங்களை சீரமைப்பதன் மூலமே, மாவட்டத்தின் விவசாய நிலங்களைக் காப்பாற்ற முடியும்.

அதேபோன்று, குறிப்பாக, புத்தளம் மாவட்டத்தில், புத்தளம் நகரம் சிறிய வெள்ளத்தைக் கூட தாக்குப்பிடிக்க முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. எனினும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அரச இயந்திரங்கள் இயங்குவதை விட ஜம்இய்யத்துல் உலமா,  டீச்சிங் ஆப் இஸ்லாம் மற்றும் அபுதாபி, குவைட், இந்தியா போன்ற நாடுகளின் உதவிகள் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் அவசர அவசரமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், மெதடிஸ்த தேவாலயங்கள் மற்றும் இன்னோரன்ன பல அமைப்புக்களும் உதவிகளைச் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதேவேளை, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹவுடன் இணைந்து வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் விஷேட கூட்டங்களை நடத்தினோம். அந்தப் பிரதேசங்களில், அவசர தேவைகளுக்காக நிதிக் கோரிக்கைகளை விடுத்தபோது, உடனடியாக நிதியினை வழங்கினார்கள். அதற்கு எமது நன்றிகளையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோன்று, அக்குரணை பிரதேசத்தை பொறுத்தவரையில், ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால், பாரியளவில் நஷ்டத்தை எதிர்நோக்கும் ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. எனவே, பெரும்பான்மை அரசாங்கமாக இருக்கின்ற நீங்கள், இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான திட்டம் ஒன்றை வகுத்து, அதனை செயற்படுத்துங்கள். அதற்குத் தேவையான நிதிகளை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் உதவிகள் தேவையாக இருப்பின், மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகளைப் பெற்றுத்தருவதற்கு நாங்களும் தயாராக இருக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாட்டில், வெள்ளப் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மலைநாட்டுப் பகுதிகளில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

எனவே, இனிமேலும் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். உடனடியாக எம்மால் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும், கட்டங்கட்டமாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து, வெள்ளப் பாதிப்பு, உயிர்ச் சேதங்கள் வராமல் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்று கூறி எனது பிரேரணையை முன்வைக்கின்றேன்” என்று கூறினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button