News

ஞானசார தேரருக்கு  ஜனாதிபதி மைத்திரி பொதுமன்னிப்பு வழங்கிய முடிவை நியாயப்படுத்திப் பேசிய ரணில் விக்ரமசிங்க, பொதுமன்னிப்பு வழங்கும் முடிவுக்குத் தான் ஆதரவளித்ததாகவும் தெரிவித்தார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2019ஆம் ஆண்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முடிவை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். 

சிறைத்தண்டனை அனுபவித்தபோது பௌத்த துறவியின் காவி உடையைக் கழற்றுவது தொடர்பான மத ரீதியான தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.


கொழும்பு, பிளவர் ரோட்டில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் வழக்கறிஞர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். 

2018ஆம் ஆண்டு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


ஞானசார தேரர் சிறையில் இருந்தபோது அவரது காவி உடை கழற்றப்படாது என்று பௌத்த மதத் தலைவர்களுக்கு அப்போதைய நீதி அமைச்சர் தலதா அதுகோரள எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அவர் தனது உடையைத் தொடர்ந்து அணிய அனுமதிக்கப்பட்டதாக விக்ரமசிங்க தெரிவித்தார்.


பௌத்த துறவு விதிகளின்படி துறவறத்திலிருந்து நீக்குவதற்குரிய குற்றமாக இல்லாத ஒரு செயலுக்காக, துறவியின் உடையைக் கழற்றுவது கடுமையான மத சர்ச்சையை உருவாக்கும் என்று பல மூத்த பௌத்த துறவுகள் பின்னர் கவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.


இந்த விவகாரம் குறித்து அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், ஞானசார தேரர் சுமார் ஒரு வருாலம் சிறைவாசம் அனுபவித்த பின்னர் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க அவர் இறுதியில் முடிவு செய்ததாகவும் விக்ரமசிங்க தெரிவித்தார்.


அப்போது தான் பிரதமராகப் பதவியில் இருந்தபோது அமைச்சரவை அமைச்சர்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாகவும், பொதுமன்னிப்பு வழங்கும் முடிவுக்குத் தான் ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த விவகாரமானது நீதிமன்றத் தீர்ப்பைத் தாண்டி, பௌத்த மத ஒழுக்கம் மற்றும் பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் 9ஆவது பிரிவின் கீழான அரசின் கடமை தொடர்பான கேள்வியாக மாறியது என்று அவர் வாதிட்டார்.


மேலும், விரிவான எழுத்துப்பூர்வ விளக்கங்கள் இல்லாமல் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் வழக்கத்தையும் முன்னாள் ஜனாதிபதி நியாயப்படுத்தினார்.

ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே வரலாற்று ரீதியாக இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


இந்தப் பொதுமன்னிப்பு தொடர்பான சர்ச்சையைக் குறிப்பிட்டுப் பேசிய ரணில் விக்ரமசிங்க, மத ரீதியான விவகாரங்களை உள்ளடக்கியதாகத் தான் வர்ணித்த இந்த முடிவை எதிர்த்ததற்காக ‘கொள்கை மாற்றத்திற்கான மையம்’ (CPA) அமைப்பையும் கடுமையாக விமர்சித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button