News

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 11 வயது சிறுமியைக் கவர்ந்து சென்று  துஷ்பிரயோகத்துக்குற்படுத்திய சம்பவம் –  “பெரியப்பா” என அழைக்கப்படும் நபருக்கு 25 வருட சிறைத்தண்டனை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 11 வயது சிறுமியைக் கவர்ந்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 37 வயதுடைய குற்றவாளிக்கு 25 வருட சாதாரண சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



2020 ஆம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டவருக்கே மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வெள்ளிக்கிழமை (09.10.2026) இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.

குற்றவாளிக்கு எதிராகத் தண்டனைச் சட்டக்கோவை 354 இன் கீழ் சிறுமியைக் கடத்திச் சென்றமை மற்றும் தண்டனைச் சட்டக்கோவை 364 இன் கீழ் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 04 ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சட்டமா அதிபரால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.



இவ்வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி எஸ். அனுஷாங்கன் ஆஜராகி வழக்கை நடத்திவந்திருந்தார்.

துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமியால் “பெரியப்பா” என அழைக்கப்படும் சந்தேக நபர் கடந்த மாதம் 25 ஆம் திகதி குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை (09.10.2026) தண்டனை வழங்கும் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.



இதன்படி, வழக்கின் தண்டனைத் தீர்ப்பாக முதலாவது குற்றமான, பெற்றோருக்குத் தெரியாமல் சிறுமியைக் கவர்ந்து சென்றமைக்காக 10 வருடங்களும், இரண்டாவது குற்றமான பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்காக 15 வருடங்களுமாக மொத்தம் 25 வருடங்கள் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 01 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், அந்த நஷ்டஈட்டைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், தண்டப்பணமாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button