News

நான் என்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தாலும் மக்களுக்கான சேவையை தொடர்ந்தும் முன்னேடுப்பேன் என அலி சப்ரி ரஹீம் அறிவிப்பு

கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று (20) காலை கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.



வழக்கு ஒன்றுக்கு ஆஜராகாத நிலையில் இருந்த அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதி அயோனா விமலரத்ன கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வைத்து திறந்த பிடியாணை ஒன்றை கடந்த 8 ஆம் திகதி பிறப்பித்திருந்தார்.



இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இன்று (20) காலை 9.30 மணியளவில் கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு ஆஜராக சென்றிருந்த போது, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இவ்வாறு கைது செய்யப்பட்ட அவரை புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் இந்திக தென்னகோன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.



கற்பிட்டி – குறிஞ்சிப்பிட்டி பகுதியில் உள்ள மஸ்ஜிதுக்கு சொந்தமான மதரஸா கட்டடம் ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று கடந்த ஆறு வருடங்களுக்கும் மேல் பலவந்தமாக கையகப்படுத்தி தமது சொந்த சொத்தாக வைத்திருப்பதாக அந்தப் பகுதியில் உள்ள மக்கள் எனக்கு தெரியப்படுத்தினார்கள்.



இது தொடர்பில் கற்பிட்டி பிரதேச செயலாளர் உட்பட கலாசார அமைச்சும் குறித்த கட்டடத்தை மஸ்ஜித் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக் கொண்டனர்.



எனினும், குறித்த நிறுவனம் அந்த மதரஸாக் கட்டடத்தை உரிய தரப்பினரிடம் ஒப்படைக்காமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டே போனது. அமைப்பொன்று மதரஸாவுக்காக வக்பு செய்து அந்த கட்டடத்தை தமக்கு ஏற்றவாறு அந்த நிறுவனம் மாற்றியமைத்தும் கொண்டது.



இதனையடுத்து, மஸ்ஜித் நிர்வாகத்தினரையும், அந்த அரச சார்பற்ற நிறுவனத்தையும் அழைத்து பேசினேன். அந்த சந்தர்ப்பத்தில் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காமல் பேசிய விடயங்களையே பேசிக் கொண்டே இருந்தனர்.



அப்போது அங்கு அமைதியின்மையும் ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு பொலிஸாரும் வருகை தந்திருந்தனர்.



இதன்போது அங்கு இருந்த பிரதேச மக்களுடன் இணைந்து குறித்த அரச சார்பற்ற நிறுவனம் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்திருந்த மஸ்ஜிதுக்கு சொந்தமான மதரஸா கட்டடத்தை இழுத்து மூடி அதன் திறப்பை கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்தோம்.

இதனை காரணம் காட்டி அந்த அரச சார்பற்ற நிறுவனத்தினர் எனக்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.



கடந்த 8 ஆம் திகதி அந்த வழக்கு விசாரணைகளுக்காக எடுக்கப்பட்டது. அன்றைய தினம் நிகழ்வொன்றுக்கு பிரதமர் புத்தளத்திற்கு வருகை தந்தார். நானும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் என்னால் வழக்கு விசாரணைக்காக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி கற்பிட்டி பொலிஸ் நிலையை நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கும் அறிவித்தேன்.



எனினும், அன்றைய தினம் எனக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை ஒன்றை பிறப்பித்திருந்தது. எப்போதும் சட்டத்தை மதித்து செயற்படும் நான் கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆஜராகிய போது அவர்கள் என்னை கைது செய்து பதில் நீதிவான் முன்னிலைப்படுத்திய போது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறேன்.



சமூகத்திற்காக பணியாற்றும் போது, அந்த மக்களுக்காக குரல் கொடுக்கும் போது இவ்வாறான சோதனைகள் வருவது வழக்கமாகும். நாட்டின் சட்டத்தையும் மதிக்க வேண்டும். எங்களை நம்பியிருக்கும் பொதுமக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். நான் என்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தாலும் மக்களுக்கான சேவையை தொடர்ந்தும் முன்னேடுப்பேன் என்றார்.


ரஸீன் ரஸ்மின்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button