News

சீனியால் பாணி தயாரித்து, அதனை தேன் என விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று பேர் கைது

க. அகரன்

சீனி பாணி தயாரித்து தேன் என விற்பனை செய்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனி பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொது சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெளுக்குளம் பொது சுகாதார பரிசோதகர் சிவரஞ்சன் தலைமையில், ஓமந்தை பொது சுகாதார பரிசோதகர் விதுசன், கந்தபுரம் பொது சுகாதார பரிசோதகர் ஞானபிரகாஸ், பூவரசங்குளம் பொது சுகாதார பரிசோதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார்; இணைந்து ஊர்மிலா கோட்டம் பகுதியில் உள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200போத்தல் சீனிப்பாணி சுகாதார பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபடவுள்ளனர்.

இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து ஏ-9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம், மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியான முறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button