இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் மேலும் 31 பலஸ்தீனர்கள் பலி

காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒன்றுக்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக பலஸ்தீன வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி இருக்கும் நிலையில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் மேலும் 31 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று குடும்பங்களுக்கு எதிராக மேற்கொண்ட படுகொலைகளில் குறைந்து 31 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 79 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய காசாவில் அல் துர்க் குடும்பத்திற்குச் சொந்தமான தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மீது நேற்று அதிகாலை இடம்பெற்ற வான் தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஒரே குடும்பத்தின் பத்து பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
இந்த கட்டடத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய சேதத்திற்கு மத்தியிலும் தொடரும் செல் குண்டு தாக்குதல்களுக்கு இடையிலும் மீட்புப் பணிகளை முன்னெடுக்க முடியாதிருப்பதாக கூறப்படுகிறது.
வடக்கு காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் உக்கிர தாக்குதல்கள் அங்கு அபாயகரமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அங்குள்ள கமால் அத்வான் வைத்தியசாலை அடிக்கடி தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. ஆளில்லா விமானங்கள் இந்த வைத்தியசாலை மீது 10க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசி இருப்பதோடு வைத்தியசாலையைச் சூழ இஸ்ரேலியப் படை மூன்று குண்டுகளை வீசியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் வைத்தியசாலையில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டிருப்பதோடு இஸ்ரேலியப் படையின் முற்றுகையால் மருந்து மற்றும் மருத்துவ விநியோகங்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரின் கிழக்காக குட்சா சிறு நகரிலும் வடக்கே நுஸைரத் அகதி முகாமிலும் இடைவிடாது செல் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் குடியிருப்பாளர்களின் வீடுகளை இஸ்ரேலியப் படை புல்டோசர்கள் கொண்டு தகர்த்து வருவதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை காசாவில் ஓர் ஆண்டுக்கு முன்னர் போர் வெடித்தது தொடக்கம் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 12,799 மாணவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் குறைந்தது 20,942 மாணவர்கள் காயமடைந்திருப்பதாகவும் பலஸ்தீன கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பான்மையான மாணவர்கள் காசாவிலேயே கொல்லப்பட்டிருப்பதாக அந்த அமைச்சின் அறிக்கையை மேற்கோள்காட்டி வபா செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோன்று குறைந்தது 598 ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் கொல்லப்பட்டு மேலும் 3,801 பேர் காயமடைந்துள்ளனர்.
பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்துடன் தொடர்புபட்ட 65 கல்வி நிறுவனங்கள் உட்பட 425 அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கட்டங்கள் மீது இஸ்ரேலியப் படை தாக்குதல்களை நடத்தி பகுதி அளவு அல்லது முழுமையாக அழித்திருப்பதாகவும் அந்த அமைச்சின் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காசாவில் 14 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருகின்றபோதும் அங்கு இஸ்ரேலியப் படை தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வருகிறது. தெற்கு காசாவில் இடம்பெற்ற மோதல்களில் இரு படையினர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. இதில் 35 வயது மேஜர் மஷிகோ மக்சிம் ரொசன்வோல்ட் மற்றும் பெயர் குறிப்பிடதாக மற்றொரு வீரர் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து இராணுவம் எதுவும் குறிப்பிடவில்லை. இவர்களுடன் காசா போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை 817 ஆக அதிகரித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியில் எகிப்து, கட்டாருடன் அமெரிக்காவும் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வருகின்றபோதும் அதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. எவ்வாறாயினும் தற்போதைய மறைமுகமான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாக பலஸ்தீன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘மிடில் ஈஸ்ட் ஐ’ இணைய செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் லெபனானில் எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் வடிவை ஒத்ததாக இந்த போர் நிறுத்தம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் யூத பண்டிகையான ஹனுக்காவுக்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காசா போர் இஸ்ரேலிய அரசுக்கும் அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவுக்கு சர்வதேச அளவில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி இருப்பதோடு காசாவில் தொடர்ந்தும் நூறுக்கும் அதிகமான பணயக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக இஸ்ரேலில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



