இவ்வளவு காலமும் போதைப்பொருள் பாவிப்பவர்களை மட்டுமே பிடித்து வந்தனர் – போதைப்பொருளை கொண்டு வருபவர்கள் பிடிபடவில்லை ; இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

போதைப்பொருள் பாவனையாளர் பிடிபட்டுள்ள போதிலும் போதைப்பொருளை கொண்டு வருபவர்கள் பிடிபடவில்லை என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் திரு.எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளை ஒழிப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசியல் தடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் இந்நாட்டு இளைஞர்களை போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அதனடிப்படையில், போதைப்பொருள் தடுப்புக்காக அடுத்த வருடம் நாட்டில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது ஊடக நிகழ்ச்சி அல்ல எனவும், இதற்கு பொலிஸ் திணைக்களத்தின் நேர்மையான தலையீட்டை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நகரங்களில் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ நகரமும் ஒன்று எனவும், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு பலியாவதால் அவர்களின் கல்வி தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு இருக்காது எனவும் பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.



