News

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும்… ( திகதி பின்னர் அறிவிக்கப்படும்)

ஜனாதிபதித் தேர்தலைத் தவிர்ப்பதற்காக அல்லது ஒத்திவைப்பதற்காக அரசாங்கம் பல்வேறு தந்திரங்களைக் கையாள்வதாக அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக அரசியலமைப்பின் 83ஆவது உறுப்புரையில் (ஆ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட’ எனும் சொல்லுக்கு மாறாக ‘ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட’ எனும் சொல்லைப் பதிலீடு செய்து அரசியலமைப்பின் 83ஆவது உறுப்புரையின் (ஆ) பந்தியைத் திருத்தம் செய்வதற்காக கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தேர்தலை ஒத்திவைப்பதற்காக 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகளின்போது சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடும் செயற்பாட்டை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கடந்த 18ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர்களின் நிலைப்பாட்டைப் பின்வருமாறு எம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.

ரணிலின் தந்திரங்கள் பலிக்காது !

ஜனாதிபதித் தேர்தலின் மீதான பயத்தினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் புதிய புதிய தந்திரங்களை கையாளுகிறது. ஆனால், அவர்களின் தந்திரங்கள் நிறைவேறாது. அவர்களுக்கு ஏற்றாற்போன்று அரசியலமைப்பை விவரித்தால் சிறைச்சாலையே இறுதி முகவரியாக இருக்குமென்கிறார் சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகபெரும.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம், பல தரப்பினராலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சகல செயற்பாடுகளிலும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எவ்வளவு பயத்துடன் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்களுக்கு தேர்தல் தொடர்பில் போபியா (phobia) ஏற்பட்டுள்ளது. அதனால், ஏதாவதொரு தந்திரத்தினூடாக சட்ட ரீதியான முடிச்சொன்றினூடாகச் சரி ஜனாதிபதித் தேர்தலைத் தவிர்க்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. அது தெளிவாகத் தெரிகிறது.

இவர்கள் என்ன தந்திரம் செய்தாலும் எமது அரசியலமைப்பு மிகவும் பலமானது. அரசியலமைப்பில் 1981ஆம் ஆண்டில் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு நடத்துவது மற்றும் அதற்கான அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவுக்கான அதிகாரமும் கிடைத்துவிட்டது. இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வேட்பு மனுக்களைப் பொறுப்பேற்கும் திகதியை அறிவிப்போம் என்று தேர்தல் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதற்கமைய, ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதிக்கிடையிலான ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஆணைக்குழு பொறுப்பேற்கும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாகும். செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி அல்லது ஒக்டோபர் 05ஆம் திகதி போன்ற தினங்களில் தேர்தலை நடத்துவார்கள் என்று கடந்த ஏழு தேர்தல்களைக் கண்காணித்த நபர் என்ற அடிப்படையில் நான் நம்புகிறேன். இதுவே ஜனாதிபதித் தேர்தலுக்கான சட்டவிதியாகும்.

அரசியலமைப்புக்கு அப்பாற் சென்று செயற்படுவதற்கு ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட வேறு எவருக்கும் அதிகாரம் இல்லை. தமது தேவைக்கேற்ப அரசியலமைப்பை விவரித்து, யாப்பை மீற முயற்சித்தால் அவ்வாறு நினைப்பவர்களின் தற்போதைய முகவரிக்குப் பதிலாக மெகசின் சிறைச்சாலை அல்லது வேறு ஏதாவதொரு சிறைச்சாலையின் முகவரியைத் தெரிவுசெய்ய நேரிடும்.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆகவே, குழப்பத்தை ஏற்படுத்தும் போலிச் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் மக்கள் ஏமாற்றமடைந்துவிடக் கூடாது. ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ ஜனாதிபதி நாட்டில் இருப்பார் என்பது உறுதி.

சர்ச்சைகளால் சட்டத்தை அசைக்க முயற்சிக்காதீர்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலைப் க்காது என்கிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்போவதில்லை என்று நீதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். தேர்தலுக்கு முன் அவ்வாறானதொரு திருத்தம் முன்வைக்கப்பட்டாலும் அது ஜனாதிபதித் தேர்தலை ஒருபோதும் பாதிக்காது.  ஒருபோதும் பாதிக்காது. முதலில தேர்தலை நடத்த வேண்டியதே அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும்.

சர்ச்சையை ஏற்படுத்துவதற்கான அவசியம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. இருந்தபோதும், அரசாங்கம் எதிர்பார்ப்பதுபோன்ற சிக்கல் நிலை ஏற்படாது என்பதே எங்களின் நம்பிக்கையாகும்.

அரசியலமைப்பின் 83ஆவது உறுப்புரையிலுள்ள வருடங்களின் எண்ணிக்கையை மாற்றியமைப்பதற்காகவே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்டாலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அவ்வாறு அரசியலமைப்புத் திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனில், அதை முதலில் வர்த்தமானியில் வெளியிட வேண்டும். அவ்வாறு வர்த்தமானியில் வெளியிட்டாலும் அது தேர்தலுக்கு இடையூறாக இருக்காது என்று விளக்கமளித்தார்

பொய் விளக்கங்கள் அவசியமற்றவை

தேர்தலை நடத்துவார்களா, இல்லையா என்ற அச்சத்தை ஏற்படுத்து வதற்காகவே இதுபோன்ற பொய்க் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன என்கிறார் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய.  ஜனாதிபதித் தேர்தலில் எவ்வித சந்தேகமும் இல்லை. தேர்தல் உறுதியாக இடம்பெறும். ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தை முன்வைக்கப்

போவதில்லை என்று அரசாங்கமே அறிவித்துள்ளது.  எனவே, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வைத்து சமூகத்தில் வெறும் சர்ச்சையை ஏற்படுத்துவதற்கே முயற்சிக்கிறார்கள். தேர்தலை நடத்துவார்களா இல்லையா என்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற பொய்க் கருத்துகளை முன்வைக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக இடம்பெறும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இரு மாதங்களில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தாலும் இல்லாவிட்டாலும் தேர்தல் நிச்சயமாக இடம்பெறும். தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

22இற்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் தொடர்பில்லை

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் என்பது ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்காக முன்வைக்கப்படும் யோசனை இல்லை. இதற்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா.  22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் என்பது ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்காக முன்வைக்கப்படும் யோசனை இல்லை. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது, அதனூடாக ஜனாதிபதியின் பதவிக்காலமும் பாராளுமன்ற ஆயுட்காலமும் ஆறு வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டன. இருந்தபோதும், அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரையில் ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களுக்கு மேல் ஒத்திவைத்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவிக்காலம் ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பின் இன்னுமொரு இடத்தில் ஆறு வருடங்களுக்கு மேல் என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்தாகக் குறைக்கப்பட்டதன் பின்னர் அது ஐந்து வருடங்களுக்கு மேல் என்று திருத்தியமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான திருத்தத்தையே 22 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அதாவது, தற்போதுள்ள நிலைமையை சரிசெய்வதற்காகவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

எனவே, இந்தத் திருத்தம் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடையது அல்ல. தேர்தலை நடத்துவதற்கு தற்போது வரையில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதனால், தேர்தலை ஒருபோதும் ஒத்திவைக்க முடியாது. தேர்தலுக்கான பணத்தையும் பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கமும் அறிவித்துள்ளது. அதனால் நிச்சயமாக தேர்தல் இடம்பெறும். 22 ஆவது திருத்தத்துக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை.

உயர்நீதிமன்றத்தின் விளக்கத் துக்கமையவே சர்வஜன வாக் கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். பதவிக்காலத்தைக் குறைக்கும்போது சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என்று இதுவரையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது பதவிக் காலத்தைக் குறைக்கவே முயற்சிக்கிறார்கள்; அரசியலமைப்பை சமநிலைப்படுத்தவே இதனூடாக முயற்சிக்கிறார்கள்.

எவ்வாறாக இருந்தாலும், ஒருவேளை சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தியே ஆகவேண்டும்.

எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி    பதவியேற்றிருப்பார். எனவே, இந்தத் திருத்தத்துக்கும் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது பொய்யான நிலைப்பாடாகும்.

அதேபோன்று, பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பிலும் எங்கும் பேசப்படவில்லை. அது தொடர்பில் வெளியிடப்படும் சகல கருத்துகளும் பொய்யானவையாகும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைக் கலைப்பார் என்று நான் கருதவில்லை. தேர்தலுக்கு முன்னர் கலைத்தாலும் தேர்தலை நடத்துவதற்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாது. வெறும் கட்டுக்கதைகளே கூறப்படுகின்றன. தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் தெரிவாகும் புதிய ஜனாதிபதி குறுகிய சில தினங்களில் உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கலைப்பார் என்பதே எனது நிலப்பாடாகும். அதன்பின்னரே பொதுத் தேர்தலும் இடம்பெறும். ஜனநாயகத்தைநகைச்சுவையாக்க முயற்சிக்கக் கூடாது. அதற்கு மக்களும் ஏமாற்றமடையக் கூடாது.

   நா.தினுஷா

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button