“உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டும்”
இந்தியாவுடன் இணைந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து உலகிற்கு எண்ணெய் வழங்குவோம்..- ஜனாதிபதி..
திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கு எண்ணெய் விநியோகம் செய்வதற்கு தேவைக்கு அதிகமானது என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ, முத்துராஜவெல பிரதேசங்களில் எண்ணெய் தாங்கி வளாகங்கள் உள்ளதாகவும், இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடமும் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் இருப்பதாகவும் தெரிவித்த அவர், திருகோணமலைக்கு இவ்வளவு எண்ணெய் தாங்கிகள் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கணக்கிட்டு பார்த்ததில் அந்த மாகாணத்திற்கு எண்ணெய் விநியோகம் செய்ய 24 எண்ணெய் தாங்கிகள் இருந்தால் போதுமானது. 24 ஐ எமது பெற்றோலிய கூட்டுத்தாபணத்திற்கு எடுத்துகொண்டு ஐ ஓ சி க்கு 10 எண்ணெய் தாங்கிகளை ஒதுக்கினோம். எமக்கு 61 எண்ணெய் தாங்கிகள் எஞ்சியது.
திருகோணமலையில் மேலதிகமாக உள்ள 61 எண்ணெய் தாங்கிகளை , இந்திய நிறுவனமும் பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனமும் இணைந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்து எண்ணெய் தாங்கிகளில் சேமித்து வைத்து உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.