தயாசிரி , ரொஷான் ரனசிங்க , அர்ஜுன ரனதுங்க உள்ளிட்டவர்கள் சஜித் அணியில் இணைய தீர்மானம் !
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் தயாசிறி ஜயசேகர கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி தயாசிறி ஜயசேகர யார் என்பதை அறிந்து கொள்ளலாம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்ட ரீதியான நிறைவேற்று சபையின் ஊடாகவே விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். நிறைவேற்று சபையின் அங்கீகாரத்துடனேயே அவர் ஜனாதிபதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அதற்கு எவரும் எதிர்ப்பினை வெளிப்படுத்தவுமில்லை.
எனினும் சிலர் அவர் சுதந்திர கட்சி இல்லை என்றும், வெளிநபர் என்றும் கூறுகின்றனர். விஜேதாச ராஜபக்ஷவை அவ்வாறு கூறுபவர்கள் சு.க. தோன்றிய போது இந்த உலகத்தில் பிறந்திருக்கவும் மாட்டார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட போது, அவருக்கான நீதிமன்றத்தில் முன்னிலையான இளம் சட்டத்தரணியாக விஜேதாச ராஜபக்ஷவே காணப்பட்டார்.
கட்சி தவிசாளராக நியமிக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே அவர் சு.க. உறுப்புரிமையையும் பெற்றுள்ளார். ஆனால் சு.க.விலிருந்து அரசாங்கத்துடன் இணைந்தவர்களுக்கு கட்சி தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு உரிமை இல்லை. அவர்கள் எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியாகாது. ஜனாதிபதித் தேர்தலில் எனது முழுமையான ஆதரவு விஜேதாச ராஜபக்ஷவுக்கே.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் 8 ஆம் திகதி கூட்டணி ஒப்பந்தத்தில் தயாசிறி ஜயசேகர கையெழுத்திடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் அவரது நடவடிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
அவரோடு ரொஷான் ரனசிங்க , அர்ஜுன ரனதுங்க உள்ளிட்டவர்கள் சஜித் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.