எமது ஆட்சியில் பாதாள உலக கோஷ்டிகளுக்கு எவ்வித தளர்ச்சியும் வழங்கப்பட மாட்டாது !

தமது அரசாங்கத்தின் கீழ் பாதாள உலக கோஷ்டிகளுக்கு எவ்வித தளர்ச்சியும் வழங்கப்பட மாட்டாது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று புதுக்கடை நீதிமன்றில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்த விஷயத்தைப் பற்றி நாங்கள் ஆழமாக யோசித்து வருகிறோம். பாதாள உலகம் தொடர்பில் ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அண்மைய நாட்களில் இந்தியா மற்றும் டுபாயில் இருந்து சில முன்னாள் பாதாள உலக குற்றவாளிகளை இந்த நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. பாதாள உலகத்தை ஒடுக்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை இங்கு வெளியிட முடியாது.பாதாள உலக கறுப்புப் பண மோசடிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை வழிநடத்தும் சிலர் இலங்கையில் கூட இல்லை. சில இடங்களில் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு விசேட அதிரடிப்படை பொலிஸார் புலனாய்வு பிரிவினரை களமிறக்கியுள்ளனர்” என குறிப்பிட்டார்.



