என் மரணம் சரித்திரமாகவேண்டும்… ஏறாவூர் கலீல் ஹாஜியின் எண்ணம் அங்கிகரிக்கப்பட்ட நாள் இன்று !!

என் மரணம் சரித்திரமாகவேண்டும்.
ஏறாவூர் கலீல் ஹாஜியின் எண்ணம் அங்கிகரிக்கப்பட்ட நாள் இன்று !!
இனவாத ஆட்சியாளர்களினால் தீயிடப்பட்டு வந்த ஜனாசாக்களை தடுத்து நிறுத்தி மஜ்மாநகருக்குள் முதலாவதாக “கபுர்’ களம் கண்ட எனது உடன்பிறவா சகோதரனும் நன்பனுமான
மர்கூம் ஏறாவூர் கலீல் ஹாஜியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று !
(ஏறாவூர் நஸீர் -ISD)
எங்கு கண்டாலும் #நானா என பாசத்துடன் நலன் விசாரிக்கும் உன்னை 4 ஆண்டுகளாக காணாமல் தவிக்கிறேனே!! எங்கு சென்றாய் நீ!
2021 களில் நம் நாட்டை ஆட்கொண்ட கொரோனா வைரஸ் பல உயிர்களையும் காவுகொண்டபோது, முஸ்லீம்கள் மீது காழ்ப்புணர்வு கொண்ட அன்றைய இனவாத அரசானது “கொரோனாவினால் மரணமடையும் பிரேதங்களை எரிக்க வேண்டுமென்று ” முடிவெடுத்து ,பிறந்து 20 நாள் முஸ்லீம் குழந்தையைக்கூட அடக்க விடாமல் வலுக்கட்டாயமாக எரியூட்டி தேசிய ரீதியில் முஸ்லீம்களின் உள்ளங்களை ரணமாக்கிய அந்த நாட்களுக்கு ,உன் மரணம்தான் விடிவைத் தந்தது என்றால் மிகையாகாது சகோதரா!
உன் நாவினால் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட சொல்லை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான் என்பதை கண்ட நாள்தான் 27-02-2021.
அதாவது “என் மரணம் சரித்திரமாக அமைய வேண்டும் ” என்று நீ அடிக்கடி கூறி வந்தது நினைவுக்கு வந்த நாள் 27-02-2021.
ஆம்… கொரோனா தொற்றுக்குள்ளான உன்னை
27-02-2021 யில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு வைத்தியசாலைநோக்கி அவசரமாக அம்பியுலன்ஸில் கொண்டு செல்லும்போது குருனாகல் பிரதேசத்தில் வைத்து உன்னை அல்லாஹ் அழைத்துக்கொண்ட தகவலறிந்து திகைத்துப்போனேன்.
ஆனாலும் உன்னை எரிக்கவிடாமல் அடக்கம் செய்ய அல்லாஹ் நாடிவிட்டான் என்ற சுபசெய்தி மனதிற்கு ஆறுதலை தந்திருந்தது.அதனால் உன் ஜனாசாவை ஓரிரு நாட்கள் தாமதித்து தேசியத்தின் பிரார்த்தனைகளுடன் 05-03-2021 அன்றுதான் முதன் முதலாக ஓட்டமாவடி சூடுபத்தின சேனை மஜ்மாநகரில் நல்லடக்கம் செய்தோம்.
உனக்கென்ன கொரோனா!
நீ கொடுத்து வைத்தவன்.
உன் இழப்பினால்தான் எரியூட்டப்பட்ட ஜனாசாக்களுக்கு முற்றுப்புள்ளியை தந்தான் அல்லாஹ்!
அந்த வகையில் நீ கொடுத்துவைத்தவன்தான்.
அதுமட்டுமா! மாகாணங்கள் கடந்து செல்ல விடாமல் உன் மாவட்ட மண்ணிலேயே உன்னை முதன் முதலாக விதைத்து, தேசிய மக்களின் உணர்வு பூர்வ பிரார்த்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாய்!
அந்த வகையில் நீ கொடுத்து வைத்தவன்தான்.
தேசத்தின் வரலாற்று பதிவேட்டில், கொரோனா மரணங்களில் எரிக்கப்படாமல், நல்லடக்கம் செய்யப்பட்ட பட்டியலில் உன் பெயரை உச்சரித்த பின்னர்தான், பிறர் பெயர் வாசிக்க வைத்திருக்கிறாய்.
அந்த வகையிலும் நீ கொடுத்து வைத்தவன்தான்.
ஆனாலும்,,,
மனம் தாங்க முடியாமல், கணதியான சோகங்களுடனயே 4 வருடங்களாக நான் மட்டுமல்ல உன் மனைவி , மக்கள் மற்றும் சகோதர சகோதரிகள் உறவுகள், நண்பர்கள் தவிக்கின்றார்கள்.
என் அருமை சகோதரா!
உன்னை விதைத்த அன்று மாத்திரமல்ல,
உன் மண்ணறை அருகில் பல தடவைகள் வந்திருக்கிறேன்.ஏன்? நேற்றும்கூட வந்து சென்றேன்.
அறிவாயா நீ!!
கண்ணீர் மல்க உன் மண்ணறையிலிருந்து விடைபெற முடியாமல், காலத்தின் கட்டாயத்தினால் விடைபெற்று வந்திருக்கிறேன்.
உன் மறுமை வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமைய வல்ல நாயன் அருள் புரிவானாக.(ஆமீன்)
நமது குழந்தைப் பருவம் தொடக்கம், உன் மரணம் வரை நாம் மனம் கசந்து நடக்கவில்லையே, அல்ஹம்துலில்லாஹ்! .
இறுதியாக 19-02-2021 வெள்ளிக்கிழமை உன் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் ஸாவியாவில், இருவரும் அருகருகே நின்று ஜும்ஆ தொழும்போது, நினைக்கவில்லையே அடுத்த ஜும்ஆ உனக்கு கிடைக்காதென்று!!
தொடர முடியவில்லை தம்பி,,,
கண்கள் குளமாகின்றது…
கைகள் பலமிழந்து போவதுபோல் உணர்கிறேன்….
ஏழுவயதில் தொழுகையை கடைப்பிடித்தவர்கள் நாம்.
ஒன்றாக ஓதியிருக்கிறோம்.
ஒன்றாக விளையாடியிருக்கிறோம்.
ஒன்றாக தூங்கியிருக்கிறோம்.
ஒன்றாக பயணித்திருக்கிறோம்.
ஒரு வருட வயது வித்தியாசத்தில் ஜுனியர், சீனியராக ஒரே பாடசாலையில் கற்றிருக்கிறோம்.
ஆனால் மரணத்தில் நீ முந்திவிட்டாயே!!
யாஅல்லாஹ்! எனது சகோதரனை பொருந்திக்கொள்வாயாக!
ஒவ்வொரு நோன்பிலும் குர்ஆனை முழுமையாக, பல தடவை ஓதி முடிக்கும் நீ,
போட்டி போட்டு ஓதுவதைப் பார்த்து, உன்னிடம் விசாரிக்கும் போது,
எனது மனைவி ஹினாயாவும் என்னைப்போல் போட்டிபோட்டுத்தான் ஓதுகிறார் என்பாயே!!
இன்னும் ஒரிரு நாட்களில் தொடங்கவிருக்கும் நோன்பில் உன் மனைவி, பிள்ளைகள்தான் அந்த இடத்தை நிரப்புவார்கள்.
கவலை கொள்ளாதே, உன் கபுறுக்கான பாதுகாவலானாக அந்த குர்ஆன் நிச்சயம் காத்திருக்கும்
பேராதனை பல்கலைக்கழகம் சென்று பட்டம்பெற்று, திருகோணமலையில் லிகிதராக கடமையாற்றி, பின்னர் கல்குடா மண்ணில் முதல் ஆசிரியர் நியமனம் பெற்று, ஏறாவூர் அறபா மற்றும் அலிகாரில் தொடரான ஆசிரியப் பணி செய்து, இறுதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளராக இருந்ததோடு மாத்திரமல்லாமல் ,ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர்சபை உறுப்பினராகவும் இருந்து கொண்டே உன் இம்மை வாழ்வை முடித்திருக்கிறாய்.
இச் சேவைக் காலத்துக்குள் உன்னால் மேற்கொள்ளப்பட்ட புறக்கிருத்திய செயற்பாடுகள் பலருக்கு தெரியாமலிருக்கலாம்.
ஆனால் யாவும் அல்லாஹ் அறிந்தவன்.
ஏறாவூர் ஸக்காத் அமைப்பின் தலைவராயிருந்து,
ஸக்காத் கிராமம் உருவாக்கத்தின் காரண கர்த்தா நீதானே!
குடும்ப நிலை கருதி ஜேர்மன் நாட்டுக்கு தொழில் பெற்றுச் சென்ற நீ, அங்கு கிடைத்த நட்பினூடாக கொண்டுவரப்பட்டதுதானே இந்த ஸக்காத் கிராமம்.
அதற்கான கூலிகளை இன்று மண்ணறையில் சுவைத்துக்கொண்டிருப்பாய் என்பதில் சந்தேகம் இல்லை.
பணத்திற்காக, மார்க்க விழுமியங்களிலிருந்து தவறிவிட நேரிடுமோ என்ற கவலையில்தானே அந்நாட்டைவிட்டு தாய் நாடு வந்து சேர்ந்தாய்.
அல்ஹம்துலில்லாஹ்!
பசித்தோருக்கு உணவளிப்பதில் நீ கெட்டிக்காரன்.
உன் வீட்டுக்கு கறி வாங்க பொதுச்சந்தைக்கு கொண்டு சென்ற பணத்தில், பிறர் பசிபோக்க உதவிசெய்துவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினாயே! அந்த குடும்பத்தின் பிரார்த்தனை பலமானது சகோதரா!
மாவட்டத்தின் உதவியற்ற மக்களுக்கு, தன் செல்வாக்கினால் அவர்கள் பயன்பெற ஒத்துழைப்பு நல்கியிருக்கிறாய்.
மரணிப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பு கூட, அவ்வாறான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பெற்று உன் வீட்டில் வைத்து கொடுத்து திருப்தி கண்டாயே!
குடும்ப உறவுகளை பேணுவதில் உனக்கு நிகர் நீதான்!
இன்னும் எத்தனையோ உன் நல்ல விடயங்களை எழுதிக் கொண்டே போகலாம்! கண்களை கண்ணீர் மறைப்பதால் தொடர முடியாமல் தத்தளிக்கின்றேன்.
இறுதியாக ஒன்றை மட்டும் தெரிவித்து முடித்துக் கொள்கிறேன்.
1998 யில் நானும் என் மனைவியும் அவ் வேளை கையிருப்பில் இருந்த பணத்தைக் கொண்டு ஹஜ்ஜுக்கு சென்றிருந்தோம்.
எனது பெற்றோரை ஹஜ்ஜுக்கு அனுப்பாமல்
நான் செல்கிறேனே என்ற கவலை மேலோங்கியிருந்த வேளை,
என்னோடு ஹஜ்ஜுக்கு வந்திருந்த, ஏறாவூர் கூட்டுறவு சங்க முன்னாள் பொது முகாமையாளரும் தற்போதைய தலைவருமான MLA லத்தீப் ஹாஜி அவர்கள், என் வலியை உணர்ந்து, கவலைப்படாமல் கஹ்பாவில் துஆ கேளுங்க மருமகன், அல்லாஹ் பெற்றோரையும் ஹஜ்ஜுக்கு அனுப்ப வழியமைப்பான் என்று கூறி ஆறுதல் படுத்தியதை இன்றும் நினைவுகூறுகிறேன்.
அல்லாஹ்வின் நாட்டம் 1999 யிலேயே என் தந்தையை ஹஜ்ஜுக்கு செல்ல ஏற்பாடுகளை செய்து தந்த போது,
தந்தையுடன் கூடச்செல்ல யாருமில்லையே என்ற கவலையோடு இருந்த வேளை , அன்று கைகொடுத்தது நீதானே தம்பி.
நானும் இம்முறை ஹஜ்ஜுக்கு போகிறேன் நானா, வாப்பாவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாயே!
ஹஜ்ஜில் வைத்து எனது வாப்பாவுக்கு ஏற்பட்ட நோய்கள் பற்றியோ, அசௌகரியங்கள் பற்றியோ என்னிடம் ஒருவார்த்தைகூட சொல்லாது, உன் தந்தைபோன்றே பார்த்து அழைத்துவந்து ஒப்படைத்தாயே!
உனக்கு அதற்கான நிரப்பமான கூலிகளையும் அல்லாஹ் நிச்சயம் தந்தருள்வான்.
யாஅல்லாஹ்!
எனது சகோதரன் கலீல் ஹாஜியை இழந்து தவிக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் ஏனைய உறவுகள் அனைவருக்கும் மன ஆறுதலை வழங்குவதோடு,
தம்பி கலீல் ஹாஜிக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தையும் வழங்குவாயாக.(ஆமீன்) ஏறாவூர் நஸீர் -ISD)

