News

“கல்முனையில் சமய தீவிரவாதம்” எனும் குற்றச்சாட்டுக்கு, விளக்க அறிக்கை வெளியிட்டது கல்முனை பெரிய பள்ளிவாசல்



நூருல் ஹுதா உமர்

“கல்முனையில் சமய தீவிரவாதம்” எனும் குற்றச்சாட்டு தொடர்பாக கல்முனையின் தாய்ப் பள்ளிவாசலான கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலும் , கல்முனை வாழ் அனைத்து மக்களும் கவலையுற்றிருப்பதுடன் மேற்படி விடயம் தொடர்பில் மிக அவதானமாகவும் இருக்கின்றோம். சமய தீவிரவாதம் தொடர்பாக இஸ்லாம் மார்க்கமும், முஸ்லிம் சமூகமும் ,குறிப்பாக கல்முனை வாழ் சிவில் சமூகமும் இக்கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானவர்களாகவே இருக்கின்றனர் என தெரிவித்து கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், கல்முனை வாழ் சிவில் சமூகத்திற்கு! “கல்முனையில் சமய தீவிரவாதம்” எனும் குற்றச்சாட்டு தொடர்பாக என தலைப்பிட்டு,

அண்மையில் பாராளுமன்றத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரினாலும், பத்திரிக்கையாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளரினாலும் கிழக்கு மாகாணத்தில் ,குறிப்பாக கல்முனையில் இஸ்லாமிய தீவிரவாதம் மேலோங்கி இருப்பதாகவும், அரசு இது விடயமாக கண்காணித்துக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கல்முனையின் தாய்ப் பள்ளிவாசலான கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலும் , கல்முனை வாழ் அனைத்து மக்களும் கவலையுற்றிருப்பதுடன் மேற்படி விடயம் தொடர்பில் மிக அவதானமாகவும் இருக்கின்றோம். சமய தீவிரவாதம் தொடர்பாக இஸ்லாம் மார்க்கமும், முஸ்லிம் சமூகமும் ,குறிப்பாக கல்முனை வாழ் சிவில் சமூகமும் இக்கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானவர்களாகவே இருக்கின்றனர்.

எனவே மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக கல்முனை பிரிவிற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகரை கடந்த 06.03.2025 அன்று சந்தித்து குறித்த விடயம் தொடர்பான பூரண விளக்கத்தினை எங்களுக்கு தருமாறும், குறித்த இஸ்லாமிய தீவிரவாதம் கல்முனையில் ஆதாரபூர்வமாக செயற்படுமாயின் அதனை முற்றிலும் இல்லாமலாக்குவதற்கான உரிய நடவடிக்கைகளை பாதுக்காப்பு பிரிவினர் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும், அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் எமது ஊர் பள்ளிவாசல்களும், மக்களும் வழங்க தயாராகவுள்ளோம் எனும் உறுதிப்பாட்டை எழுத்து மூலமும் அறியப்படுத்தி உள்ளதோடு இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசலும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளோம். 

இது தொடர்பாக மேலதிக கலந்துரையாடலுக்காக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அவர்களை நமது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அழைத்து இருப்பதுடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அவர்களின் தலைமையில் அனைத்து மாகாண, மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கல்முனையின் சிவில் சமூக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றிணையும் மிக விரைவில் ஏற்பாடு செய்து மேற்கூறப்பிட்ட விடயம் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மேலும் கொழும்பிலுள்ள International Advocacy Institution ஒன்றின் துணையுடன் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பான உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்து அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் முன்வைப்பதற்கான மேலதிக ஏற்பாடுகளையும் எமது நம்பிக்கையாளர் சபை முன்னெடுத்துவருகின்றது.

எனவே மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் எமதூரின் தாய்ப்பள்ளிவாசல் விரைந்து செயற்பாட்டுக்கொண்டிருக்கிறது என்பதுடன் பொது மக்களாகிய தாங்களும் இவ்விடயத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அன்பாய் வேண்டிக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.


UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism,

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button