News

அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளம் போதைப்பொருள் வியாபாரி – மற்றுமொருவர் தப்பியோட்டம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அக்கரைப்பற்று 1ம் பிரிவை சேர்ந்த 23 வயதுடைய இளம் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் நேற்று முன்தினம்  ( 31ம் திகதி )  மாலை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி W.M.S.P  விஜயதுங்கவின் வழிகாட்டலில்  , அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி  Ps 37351 மானமடுவவின்  நெறிப்படுத்தலில் பொலிஸ் உத்தியோகத்தர்களான  pc 6494  கஜந்தன் , pc 45111 செய்யத் மெளலானா , pc 89054 றிபாய்,  pc 99040 ராகுலன் மற்றும்  சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான 4051 லத்தீப் ( நிசார் )  உள்ளிட்ட குழுவினரால் 11.6 கிராம்  ஹெரோயினுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

23 வயதுடைய இந்த இளம் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி பல மாதங்களாக இப்பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை மறைமுகமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

சம்பவதினத்தன்று அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அக்கரைப்பற்று போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களான குழு அங்கு சென்று சோதனையிட்டனர்.

இதன்போது போதைப்பொருள் வியாபாரியிடமிருந்து குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீனால் பொதி செய்யப்பட்ட 11.6 கிராம் ( சுமார் 10 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட  ) எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் ,  அதனை பாவிக்கக்கூடிய கண்ணாடிக் குவளை, டிஜிட்டல் தராசு  ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


அதேசமயம், குறித்த சந்தேகநபரை கைது செய்ததை தொடர்ந்து, இப்பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பிரபல இளம் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி தப்பியோடியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை அக்கரைப்பற்று  பொலிஸ் அதிகாரிகளால் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.



குறித்த கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணை செய்ததோடு, அவரை நேற்றையதினம் (  1ம் திகதி )  அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தில் கெளரவ   A.C றிஸ்வான் முன்னிலையில் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.


இப்பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றும் இருப்பதாகவும், அதில் கல்வி கற்கும் மாணவர்களை மையப்படுத்தி அவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை  விற்பனை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக அக்கரைப்பற்று பிராந்தியத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் அதன் பாவனைகளை இல்லாமல் செய்வதற்காக பல வழிகளிலும் அக்கரைப்பற்று பொலிஸார் பெரும் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

– Mohamed Fariz

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button