Site icon Madawala News

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடித்து தெருநாய்களை போன்று ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை தெருநாய்களை போன்று ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியாவில் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பாக்டே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் பாரத்பூரில்   நடைபெற்ற பார் அசோசியேசன் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி ஆட்சி நடைபெற்றபோது சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் ஒரு கிராமத்தின் தலைவர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பாக மாமன்னர் சிவாஜி விசாரணை நடத்தினார். அப்போது அவர் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளை கொலை செய்ய வேண்டாம். ஆனால் அவர்களது கை, கால்களை உடைத்துவிடுங்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகளாக வாழ வேண்டும் என்று மாமன்னர் சிவாஜி உத்தரவிட்டார்.

கொடூர குற்றவாளிகள் சட்டத்தை மதிப்பது கிடையாது. அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட ஓர் ஊராட்சியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஊராட்சி முழுவதும் தெரு நாய்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது. இதன்பிறகு தெரு நாய்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தெருநாய்களை போன்று ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் திருமணம் செய்ய அனுமதி வழங்கக்கூடாது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவமானத்துடன் வாழ வேண்டும்.

பொது இடங்களில் யாராவது ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்டால் அதை வீடியோவில் பதிவு செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து, உதைக்க வேண்டும். அந்த நபர் வாழ்நாள் முழுவதும் வேறு எந்த தவறும் செய்யாத வகையில் பொதுமக்கள் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் குறையும். இவ்வாறு ஆளுநர் ஹரிபாவ் பாக்டே தெரிவித்துள்ளார்

Exit mobile version