வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி டயரின் காற்றை திறந்துவிட்ட பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்.
காவல்துறை சார்ஜன்ட் ஒருவர், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் சில்லு ஒன்றிலிருந்து காற்றை வெளியேற்றிய சம்பவம் தொடர்பில் காவல்துறை தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வத்தளை, மாபோல பகுதியிலுள்ள கொள்கலன் முனையம் ஒன்றுக்குப் பிரவேசித்த பாரவூர்தியொன்று சாரதியின்றி வீதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் அதன் முன்பக்க சில்லிலிருந்து காற்றை வெளியேற்றியமை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர் வத்தளை காவல் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தமையினால் குறித்த வாகனத்தின் சில்லில் இருந்த காற்றை வெளியேற்றியதாகச் சம்பவத்துடன், தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்திற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்போது அங்கு வந்த குறித்த வாகனத்தின் சாரதி தாம் சில ஆவணங்களைக் கையளிப்பதற்காகவே கொள்கலன் முனையத்துக்குச் சென்றிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் அவருக்கு அங்கிருந்த காவல்துறை உத்தியோகத்தரால் அபராத பத்திரம் வழங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்படும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.