ஷேக் ஹசீனாவின் சேலையை கட்டி…
மக்கள் கிளர்ச்சியின் எதிரொலியாக, வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா லண்டனுக்கு புறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து இன்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் கனபாபன் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டார். அவர்கள் புறப்பட்ட விமானம் திரிபுரா வழியாக புதுடெல்லி நோக்கி சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் புதுடெல்லி வந்து பின்னர் அங்கிருந்து லண்டன் செல்லலாம் அல்லது புதுடெல்லியிலேயே தங்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அரசிடம் ஷேக் ஹசீனா அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய நிலையில், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து கையில் சிக்குவதை எடுத்துக்கொண்டும், சிலர் கோப்புகளை கிழித்தனர்.
கைகளில் தடிகளுடன் அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி பிரதமர் இல்லத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஆட்டுக்குட்டி, முயல், வாத்து என்று கிடைத்த பொருட்களை எடுத்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. சிலர், பிரதமரின் நாற்காலியில் அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர்.
இன்னும் சிலர் அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டனர். சிலர் பாத்திரங்கள், மேசை விரிப்புகளை எடுத்துச் சென்றனர். இன்னும் சிலர் அங்கிருக்கும் புல்வெளி, அழகான இடங்கள் முன் புகைப்படம் எடுத்தனர். போராட்டக்காரர்களின் செயல்கள் புகைப்படங்கள், வீடியோக்களாக வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றன
இந்நிலையில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சேலையை போராட்ட காரர் ஒருவர் கட்டியிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.