News

அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்கி, குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்கும் நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சு களமிறங்கி உள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சுகாதார தகவல் தொழில்நுட்ப அமைப்பு உத்தியோகபூர்வ திறப்பு மற்றும் மருத்துவமனையின் ஆய்வகத்தின் திசு அறிவியல் துறையின் தரப்படுத்தலை பெறுவதற்காக இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை பிரிவு, மாதாந்த சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள், கதிரியல் பிரிவு, உள் நோயாளர் பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவு என அனைத்து பிரிவுகளும் தற்போது நவீனமயப்படுத்தப்பட்டு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தரப்படுத்தப்பட்ட ஆய்வக சேவையை வழங்கும் நோக்குடன் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆய்வகத்தின் திசு அறிவியல் பிரிவு, இலங்கை அங்கீகார வாரியத்தால் (SLAB) ஆய்வகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரத்திற்காக சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் விண்ணப்பித்து.

அதற்கமைய அரச மருத்துவமனையில் உள்ள ஆய்வகம் தரப்படுத்தலுக்கு உட்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். சகல பொது சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும். கடமையில் உள்ள ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்களின் தகவல்கள் உட்பட மனித வளங்களை நிர்வகிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முழு கவனமும் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முயற்சிகள் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளது.

அத்தோடு டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சுகாதார பதிவுகளை ஒன்றிணைப்பதுடன், மருந்து விநியோக வலையமைப்பை எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பத்துடன் நெறிப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நோயாளர்களுக்கு பராமரிப்பு மற்றும் உயர்தர சிகிச்சை சேவைகளை வழங்குவது சுகாதார ஊழியர்களின் பொறுப்பாகும். இதற்காக, சுகாதார அமைச்சு அதன் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் பணிபுரிவதற்கு அவசியமான சூழலை அமைத்துத் தருவதுடன், தொழில்சார் ஏனைய உரிமைகளையும் வழங்க தயாராக உள்ளது.

நாட்டில் உள்ள அரச மருத்துவமனை வளாகத்தை பொறியியல் மற்றும் கட்டிட வடிவமைப்பைப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான மற்றும் கவர்ச்சியான இடமாக மாற்ற அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மிகவும் கொந்தளிப்பான காலத்திற்குப் பிறகு அமைதியாக பயணித்து வரும் நாட்டின் சுகாதார சேவையை இன்றைய நிலைக்குக் கொண்டுவருவதில் மருத்துவமனை நிர்வாகம், விசேட மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் வழங்கிய பங்களிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் எனது பாராட்டை இத்தருனத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நெருக்கடியான சூழலில் சுகாதாரத் துறையை சரியான திசையில் வழிநடத்த பங்களித்தவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button