கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் தங்கத்துடன் புலனாய்வுத் தலைமைய பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட ஐந்து பேர் கைது

தேவேந்திர முனை- ஹும்மான வீதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையின் தேவேந்திர முனை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால், மோட்டார் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 28 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும்,150 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இன்று (17) அதிகாலை 4.00 மணியளவில் வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போதே அதிகாரிகள் பணம் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி, இந்தப் பணம் மற்றும் தங்க நகைகளுடன் சந்தேகத்தின் பேரில் 5 நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மேல் மாகாண புலனாய்வுத் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாகவும், அவர் காரின் சாரதியாக செயற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் அதிகாரியின் பிரதான இல்லமான மாத்தறையின் வெரது பகுதியில் உள்ள வீட்டில் நண்பர்களுடன் விருந்து நடைபெற்றது.
நிகழ்வுக்குப் பிறகு, தேவேந்திர முனை பகுதியில் வசிக்கும் நண்பர்களை அவர்களது வீடுகளுக்கு இறக்கிவிடச் சென்று கொண்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது மேற்கொண்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, இந்தப் பணம் வெளிநாட்டில் இருந்த ஒரு சகோதரியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறினார்.
இருப்பினும், அதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில், அவர்கள் பயணித்த கார் தெனிபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில் அவர் இந்த பொலிஸ் அதிகாரியின் உறவு சகோதரி என்பதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 45 முதல் 50 வயதுக்குட்பட்ட தேவேந்திர முனை, மாத்தறை வெரதுவ, உடுபீக்வெல்ல மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

