News

கிழக்கு மாகாணத்தை மதரீதியாகப் பிரித்து “குட்டி பாகிஸ்தான்” போல் உருவாக்க பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா முயற்சி

இலங்கையில் ஸஹ்ரானின் மத தீவிரவாதம் தற்போது சூப்பர் முஸ்லீம் பயங்கரவாத அமைப்பாக உருவாகியுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தை மதரீதியாகப் பிரித்து “குட்டி பாகிஸ்தான்” போல் உருவாக்க பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா முயல்வதாகவும் அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர் சிவதர்சன் குற்றஞ்சாட்டினார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் 2019 ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6ஆம் ஆண்டு நினைவேந்தல், அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர் சிவதர்சன் இதனை தெரிவித்திருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,


இத்தாக்குதலில் 14 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்; 80 பேர் காயமடைந்தனர். இது உலகளவில் துயரமான சம்பவமாகும். “இத்தாக்குதல் திட்டமிட்ட மத தீவிரவாதச் செயல். இதற்கு சூத்திரதாரிகளாக இருந்தவர்கள் இரத்த ஆறு ஓடுவதை ரசித்தனர். இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரம்,” என அவர் கூறினார்.


பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான், “அல்லாவை ஏற்காதவர்கள் கொல்லப்பட வேண்டும்” எனக் கூறியதை மேற்கோள் காட்டி, இதனை வன்மையாக கண்டித்த சிவதர்சன், ஸஹ்ரானின் கடும்போக்கு சிந்தனைகள் தற்போது சூப்பர் முஸ்லீம் பயங்கரவாத அமைப்பாக உருவாகியுள்ளதாகவும், இது மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். “இதற்கு எதிராக அரசு மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.


பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணத்தை மதரீதியாக பிரித்து, “குட்டி பாகிஸ்தான்” போல் உருவாக்க முயல்வதாக குற்றஞ்சாட்டிய சிவதர்சன், “மூவின மக்களும் சமத்துவமாக வாழும் இம்மாகாணத்தை மத அடிப்படையில் பிரிக்க அனுமதிக்க மாட்டோம்,” என உறுதியாகக் கூறினார்.


ஜனாதிபதி, தேர்தலுக்கு முன் உண்மையான சூத்திரதாரிகளை வெளிப்படுத்துவதாக உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. “நாங்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டோம்.இது மன்னிக்க முடியாத குற்றம். மீண்டும் எங்கள் சந்ததியை அழிக்க அனுமதிக்க மாட்டோம். ஜனாதிபதி உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். இவ்விடயத்தில் அரசியல் செய்யக் கூடாது,” என சிவதர்சன் கோரிக்கை விடுத்தார்.

Recent Articles

Back to top button