பாராளுமன்ற ஊழியர்கள் இருவர் தாக்கிக்கொண்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை இல்லை – பாராளுமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் பிழையான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் ; செயலாளர் நாயகம்
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உணவக ஊழியர்களில் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் குத்திக் கொள்ள முயற்சித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது. அவ்வாறான சம்பவங்கள் ஏதும் பாராளுமன்றத்தில் இடம்பெறவில்லை. ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உணவகத்தில் பணியாளர்கள் இருவருக்கிடையில் 2024.08.06ஆம் திகதி பணியாற்றும் நேரத்தில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதன் காரணமாக கத்திக்குத்து வரை சென்றதாக 2024.08.07 அன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை தொடர்பாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உணவகத்தில் பணியாற்றும் இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், இதில் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக்கொள்ள முயற்சித்தமை குறித்த சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்றும், ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ள விடயம் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவத்தை மிகைப்படுத்தி அறிக்கையிடுவதன் மூலம் இந்த நாட்டில் உள்ள அதியுயர் நிறுவனமான பாராளுமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும், இவ்வாறான சம்பவங்களை அறிக்கையிடும்போது அனைத்து ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம் என்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.