பிரித்தானிய கத்திக் குத்தை ஒரு முஸ்லிம் இளைஞர் செய்ததாக பொய்யான செய்தியை ஒருசில ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது ; விமல்
இலங்கையில் நடக்கும் சிறு விடயங்களையும் பெரிதுப்படுத்தி எமக்கு வகுப்பெடுக்கும் வெள்ளையர்கள் பிரிட்டனின் நிறவெறி குறித்து கவனம் செலுத்த வேண்டும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
கடந்த மாதம் 29 ஆம் திகதி பிரித்தானியாவில் வடக்கு பிரதேசத்தில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனால் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுடன்,பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு முஸ்லிம் இளைஞர். இதில் பலியான சிறுமிகள் ருவாண்டா நாட்டில் இருந்து வருகை தந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் என்று ஒருசில ஊடகங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தின் பின்னர் பிரிட்டனின் புறநகர் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் நிறவெறி தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.தெற்கு பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைக்க முயற்சித்துள்ளார்கள்.பாதுகாப்பு தரப்பினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
பிரிட்டன் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாகவே எமது பாராளுமன்றம் செயற்படுகிறது.
இலங்கையின் விவகாரங்கள் பற்றி பிரிட்டன் பாராளுமன்றத்தில் அதிகளவில் பேசப்படும்,தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்.எனவே இலங்கைக்கு ஜனநாயகம் பற்றி பேசும் பிரிட்டனில் 2011 ஆம் ஆண்டும் நிறவெறி செயற்பாடுகள் மற்றும் போராட்டங்கள் இடம்பெற்றன. இலங்கையில் நடக்கும் சிறு விடயங்களையும் பெரிதுப்படுத்தி எமக்கு வகுப்பெடுக்கும் வெள்ளையர்கள் பிரிட்டனின் நிலைவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.