News

மனைவியுடனான பிரச்சினையால் தான் பலர் மதுபானங்களை அருந்தி மன ஆறுதல் தேடுகின்றனர் .. அதனால்  மது அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும்

மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்தி மன ஆறுதல் தேடுவதனால்   மதுபானங்களின் விலைகளை குறைத்து மது அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்  வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற  மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே  இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அவர்  மேலும்  பேசுகையில்,

மதுபானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நான் தொடர்ந்து சபையில் உரையாற்றியுள்ளேன்.

மதுபானங்களின் விலை அதிகரிப்பால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளன.மதுவரி  சட்டங்களை திருத்துவதாலும்,புதிதாக மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவதாலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

மதுபானங்களின் விலை அதிகரிப்பால் மதுவரி திணைக்களம் இந்த ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் 50 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளது.

மொத்த சனத்தொகையில் 60 இலட்சமானோர் மது அருந்துகிறார்கள்.உடல் வலி,மன வேதனை மற்றும் மனைவியுடனான பிரச்சினை ஆகிய காரணிகளால் இவர்கள் மது அருந்தி மன ஆறுதலடைகின்றனர் .குறைந்த விலையில் இருந்த அதிவிசேட மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்பட்டதால் சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

மதுபான நுகர்வுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதால்  சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்துள்ளன.இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 50 பேர் உயிரிழந்துள்ளார்கள். விலை அதிகரிப்பால்  கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்தி ஐந்து மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.ஆகவே மதுபான விலைகளை குறைத்து மதுபானங்களை அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும்.
ஆகவே மதுபானங்களின் விலைகளை குறைக்குமாறு அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Recent Articles

One Comment

  1. மனைவியுடனான பிரச்சினைக்கு ஆறுதல் தேடி மது அருந்துவதால் மதுவின் விலையை குறைக்க வேண்டுமாம்….!!! ஆனால் மது அறுந்தி விட்டு நாலு காலில் தவழ்ந்து தவழ்ந்து வீடு போய், மனைவியையும், மகளையும் கொடுமைப்படுத்துகிறானானே அதற்காக மதுவின் விலையை கூட்டலாமா…? மது அருந்துவது ஆறுதல் என்பது சரிதான் ஆனால் அவன் மனிதனாக இல்லாமல் மிருகமாக இருப்பதை இவர்கள் உணர மாட்டார்களா…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button