மனுஷ நாணயக்கார பதவியில் இல்லை என்பதால், நானே தொழில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன் ; ஜனாதிபதி
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தொழிலாளர் சம்பள விவகாரத்தை கையாண்டார். கம்பனிகள் நீதிமன்றம் சென்றன. ஆனால் இப்போது அவர் அப்பதவியில் இல்லை எனவும் நானே தொழில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன் ஆகவே தொழிலாளர் வேதன விவகாரத்தை நானே கையாளப்போகின்றேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று இடம்பெற்ற வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பி்ல் அவர் மேலும் உரையாற்றுகையில்,
நான் தொழில் அமைச்சராக சம்பள நிர்ணய சபையின் தீர்மானங்களை அமுல்படுத்த உத்தேசித்துள்ளேன்.
நாம் முன்வைக்கும் சம்பளத்தொகையை கம்பனிகள் வழங்க முன்வராவிட்டால் அதற்கான புதிய சட்டமூலத்தை என்னால் கொண்டு வர முடியும்.
அதாவது சம்பள நிர்ணய சபையின் தீர்மானங்களை கம்பனிகள் நடைமுறைப்படுத்தாவிட்டால் அத்தொகையை செலுத்த வேண்டும் என நான் ஒரு சட்டத்தை கொண்டு வருவேன். அதன்பிறகு கம்பனிகளால் நீதிமன்றத்தை நாட முடியாது.
குறைந்த வேதனத் திருத்தச்சட்டத்தை நான் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து நிறைவேற்றுவேன். ஆகவே அதோடு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.