ஏழை மற்றும் தேவையுடைய விவசாயிகளுக்கு வழங்க 25 மில்லியன் ரூபாய் செலவில் அரசால் இறக்குமதி செய்யப்பட்ட சோளத்தை, அரசியல் ஆதாயம் பெற அதிகாரிகளை மிரட்டி தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு விநியோகித்த குற்றத்திலேயே முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனா கைது செய்யபட்டார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனா, 2015 ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டின் பேரில் இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில்,
2014ஆம் ஆண்டு 25 மில்லியன் ரூபாய் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட மக்காச்சோள விதைகளை, அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஏழை மற்றும் தேவையுடைய விவசாயிகளுக்கு மலிவு விலையில் வழங்குவதற்கு பதிலாக, முன்னாள் அமைச்சர் தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு விநியோகித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அனுராதபுர மாவட்ட செயலகத்தில் உள்ள அதிகாரிகள், குறிப்பாக திட்டமிடல் பணிப்பாளரை மிரட்டி, இந்த மக்காச்சோள விதைகளை தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு வழங்கியதாக எஸ்.எம். சந்திரசேனா மீது குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

