கொழும்பு நைட் கிளப்பில் வைத்து தெமட்டகொடை ருவன் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்த வந்தவர் T56 துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம்..

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் சனிக்கிழமை (19) இரவு துப்பாக்கிப் பிரயோக முயற்சி முறியடிக்கப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் தற்போது மரண தண்டனை அனுபவித்து வரும் ‘தெமட்டகொடை சமிந்த’வின் சகோதரர் ‘தெமட்டகொடை ருவனை’ இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட இருந்ததாக தெரியவந்துள்ளது.
இவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இரவுநேர விடுதிக்கு அடிக்கடி சென்று வரும் தெமட்டகொடை ருவான் சம்பவத்தன்று வழக்கத்திற்கு மாறாக சற்று தாமதமாக சென்றுள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ள சென்றவர் ருவான் வருகை தந்துள்ளாரா என தெரிந்து கொள்ள விடுதியின் வளாகத்திற்குள் நுழைய முயன்றுள்ளார்.
இதன்போது, சந்தேக நபருக்கும் விடுதியின் நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு காவலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர், துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்த வந்தவர் தான் வைத்திருந்த T-56 துப்பாக்கியை சம்பவ இடத்திலேயே கைவிட்டுவிட்டு தனது சகாவுடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது, துப்பாக்கி மற்றும் அவர்கள் வருகை தந்த மோட்டார் சைக்கிள் இரண்டையும் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில், துப்பாக்கியும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் ரோஹன் ஒலுகலவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

