News

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் ஊர்காவல் படை ஜிஹாத் அமைப்பும், இலங்கைப் படையினருடன் சேர்ந்து தான் தமிழர்களை கொன்றனர் என பாராளுமன்றில் கொந்தளித்த கோடீஸ்வரன் எம்.பி


(எம்.ஆர்.எம். வசீம்)

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடங்களை அடியோடு அழிக்கும் நோக்கோடு இலங்கைப் படையினருடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல்படையான ஜிஹாத் அமைப்பு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. அம்பாறை மாவட்டத்திலுள்ள வீரமுனையில் நிலத்தை தோண்டினால் மனித எச்சங்கள் கூடுதலாக வரும் என தமிழரசுக்கட்சி உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார் .

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்த பட்ச வேதன திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் .

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

செம்மணியில் தமிழின படுகொலை நடந்த விடயங்களை இந்த அரசு ஆராய்கின்றது. செம்மணி மனிதப்புதைகுழி தொடர்ந்தும் தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இந்த மனிதப் புதை குழியில் குழந்தைகள் கூட படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள். தாயின் வயிற்றில்வைத்து தமிழரின் கருவைக் கூட அறுத்துள்ளார்கள். தமிழினப் படுகொலை நடந்ததற்கான ஒரு சாட்சியாக இது காணப்படுகின்றது.

தமிழினப்படுகொலை ஆய்வானது சர்வதேச நியமத்தின்  அடிப்படையில்  சர்வதேச தேச நாடுகளின்,சர்வதேச நீதிமன்றங்களின் ஒத்துழைப்புடன்  நடைபெற வேண்டும். ஏனெனில்  கடந்த கால அரசுகள் உள்நாட்டு பொறிமுறைமூலம் இந்த விடயங்களை செய்து பொய்யான அறிக்கைகளைத் தான் வெளியிட்டன. எனவே எமது மக்கள் இவ்வாறான விசாரணைகளில்  நம்பிக்கையிழந்துள்ளனர் .

செம்மணி படுகொலை மட்டுமல்லாது தமிழினப்படுகொலையானது வடக்கு,கிழக்கு முழுவதும் நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள வீரமுனை படுகொலை,திராய்க்கேணி படுகொலை,உடும்புமுலை படுகொலை, மத்தியமுகாம்  படுகொலை,சத்துருக்கொண்டான் படுகொலை,கிழக்கு பல்கலைக்கழக படுகொலை,திருகோணமலை  மாவட்டத்தில்  நடந்த அதிகளவான  படுகொலைகள்  தமிழினப் படுகொலைகளாக நடந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில்  நடந்த படுகொலையானது இலங்கைப் படையினருடன் முஸ்லிம்  ஊர்காவல்படையான ஜிகாத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்  சேர்ந்தே மேற்கொண்டனர். தமிழர்களின் பூர்வீகமான இடங்களை இல்லாமல் செய்து அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை சிறுவர் பெரியோர், குழந்தைகள் என்று பாராது வயிற்றில் இருந்த குழந்தையைக்கூட  வெட்டிக்கொன்றனர்.தனிப்பட்ட ரீதியில் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட படுகொலைகள்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள வீரமுனையில் நிலத்தை தோண்டினால் மனித எச்சங்கள் கூடுதலாக வரும். அதே போன்று திராய்க்கேணியிலும் மனித எச்சங்கள் இருக்கின்றன. திருக்கோவில் பகுதியில் இருக்கின்றன ,மட்டக்களப்பில் இருக்கின்றன. வடக்கு,கிழக்கில் எங்கு நிலத்தை தோண்டினாலும் தமிழினம் அழிக்கப்பட்டதற்கான சாட்சிகளும் ஆவணங்களும் உள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்ட்டுள்ளார்கள்.

தமிழினம் இலங்கையில் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காக  திட்டமிடப்பட்ட முறையில்  இந்தப்  படுகொலைகள் செய்யப்பட்டன. எனவே இதற்கான நீதி விசாரணைகள் சர்வதேச ரீதியாக நடைபெற வேண்டும். நாம் இந்த நாட்டிடம் நீதி கேட்கவில்லை. சர்வதேசத்திடமே எமக்கான நீதியை கோருகின்றோம் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker