கர்தினால் பேராயர் ஓரினச் சேர்க்கை சமூகத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர் கோரிக்கை

இது எப்படி மனித உரிமையாக இருக்க முடியும்? இரண்டு ஆண்கள் எப்படி குடும்பம் அமைக்க முடியும்? அவர்கள் எப்படி குழந்தைகளைப் பெற முடியும்?” இவை கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரே பாலின திருமணம் தொடர்பாக தெரிவித்த கருத்துகளின் ஒரு பகுதியாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் முடிவில் ஒரே பாலின உறவுகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“எனது புரிதலின்படி, கடந்த பாராளுமன்றத்தில் ஒரே பாலின உறவுகள் குற்றமல்ல என்று கூறும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு, அதை சட்டமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நான் மனதார வரவேற்கிறேன்,” என்று அவர் அந்த சந்தர்ப்பத்தில் கூறினார்.
ஒரே பாலின உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் குழுக்கள், கர்தினால் அவர்களின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை சமூக ஊடகங்களில் காண முடிந்தது.
கலாநிதி விசாகேஸ் சந்திரசேகரம், பிபிசி சிங்களத்துக்கு தனது கருத்தை தெரிவிக்கும் போது, கர்தினால் அவர்கள் இந்த கருத்து தொடர்பாக மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினார்.
**கர்தினால் பேராயர் ஓரினச் சேர்க்கை சமூகத்திடம் மன்னிப்பு கோர வேண்டும்: மனித உரிமை செயற்பாட்டாளர் கோரிக்கை**
இலங்கையில் ஓரினச் சேர்க்கை மற்றும் பாலின மாற்று நபர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளரும், மருத்துவருமான விசாகேஸ் சந்திரசேகரம், கர்தினால் பேராயரின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.
“கர்தினால் பேராயர் பேசுவது ஓரினச் சேர்க்கை திருமணம் பற்றி. ஆனால், இலங்கையில் ஓரினச் சேர்க்கை சமூகம் ஒருபோதும் ஒரு அமைப்பாக சமலிங்க திருமணத்தை கோரவில்லை. அதற்கு காரணம், இவற்றைப் பற்றி சிந்திப்பதற்கு முன்பாக, எங்கள் சமூகத்தை குற்றவாளிகளாக கருதும் சட்டங்களை நீக்குவது மிக முக்கியமானதாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
இதற்காக, தண்டனைச் சட்டக் கோவையில் உள்ள 365, 365A பிரிவுகளை நீக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மதகுருமார்கள், பொதுமக்களின் வாழ்க்கைக்கு சட்டங்களை விதிக்க முன்னர், தங்களது மத நிறுவனங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“மதகுருமார்கள் எங்கள் வாழ்க்கையில் சட்டங்களை விதிக்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் பாலியல் நடத்தைகள் குறித்து அவர்கள் தலையிடத் தேவையில்லை. அவர்கள் தங்கள் நிறுவனங்களின் பிரச்சினைகளை கவனித்தால் போதும்,” என்று அவர் கூறினார்.
“அப்படி தலையிட வேண்டுமெனில், அதைவிட முக்கியமான பல விடயங்கள் உள்ளன. கத்தோலிக்க மதகுருக்கள், பௌத்த மதகுருக்கள், இஸ்லாமிய மதகுருக்கள் என அனைவரது நிறுவனங்களிலும், குறிப்பாக சிறுவர்களுக்கு எதிரான விருப்பமற்ற பாலியல் செயல்கள் நடைபெறுகின்றன. இவற்றைத் தடுக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும், எங்கள் பாலியல் வாழ்க்கையில் அல்ல,” என்று மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
கர்தினால் பேராயர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும், ஓரினச் சேர்க்கை சமூகத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“நான் தெளிவாகக் கூறுகிறேன், கர்தினால் பேராயர் தனது வேலையைப் பார்த்துக் கொள்வது நல்லது, எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாமல் இருப்பது சிறந்தது. கர்தினால் பேராயர் இலங்கையின் ஓரினச் சேர்க்கை சமூகத்திடம் மன்னிப்பு கோர வேண்டும். நாங்கள் அவர்களுக்கு எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, இந்த கருத்தை திரும்பப் பெற்று மன்னிப்பு கோர வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மறைந்த பா�ப்பரசர் பிரான்சிஸ், ஓரினச் சேர்க்கை தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்க கத்தோலிக்க மதகுருக்களுக்கு அனுமதி அளித்திருந்த போதிலும், “நமது கர்தினால் பேராயர் மிகவும் பழமையான, பிற்போக்கான கருத்துக்களைக் கொண்டவர்,” என்று விசாகேஸ் சந்திரசேகரம் குறிப்பிட்டார்.

