News

இந்தியாவில் மழை மேகம் ஒன்று வெடித்து பெருமளவு நீர் கொட்டியதால் 60 இற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானதுடன் நால்வர் பலியான சம்பவம் பதிவு


பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் இந்தியாவில் இருந்து வெளியாகி உள்ளது.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டநிலையில், 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கியதால், பலர் காணாமல் போயுள்ளனர் இந்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05)  இடம்பெற்றுள்ளது.

மேக வெடிப்பைத்  தொடர்ந்து அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.



உள்ளூர் பொலிஸார், எஸ்.டி.ஆர்.எப், இராணுவம் மற்றும் தீயணைப்புப் படைகளின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த வெள்ளம் தொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் பாய்ந்து வரும் வெள்ளத்தில் சிக்கி குடியிருப்புகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்திருந்தது.


தற்போது பெய்து வரும் இந்த பருவமழையால் உத்தரகாண்டில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பலத்த நீரோட்டங்கள் பாய்கின்றன. நேற்று ஹல்த்வானி அருகே பக்ரா ஓடையின் பலத்த நீரோட்டத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார், நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) பூஜியாகட் அருகே பெரிய ஓடையில் இரண்டு பேர் மூழ்கி இறந்தனர்.


இரவு முழுவதும் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ருத்ரபிரயாகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து விழுந்த இடிபாடுகள் மற்றும் பாறைகளுக்கு அடியில் இரண்டு கடைகள் புதைந்துள்ளதாக மாநில அவசர செயல்பாட்டு மையம் தெரிவித்திருந்தது.

முழுவீடியோவை பார்வையிட இந்த லிங்கை கிளிக் செய்யவும்

https://x.com/PTI_News/status/1952666329326174219

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button