டொனால்ட் ட்ரம்பின் 50% வரிக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டது – நாம் (ரஷ்யாவிடம் இருந்து) எண்ணெய் இறக்குமதி செய்வது எமது 140 கோடி மக்களின் / தேசத்தின் நலனை அடிப்படையாக கொண்டது என மேலும் தெரிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக கூடுதல் 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்த சிறிது நேரத்தில், இந்திய அரசு “தேசிய நலன்களைப் பாதுகாக்க” நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த கூடுதல் வரிகள் மற்றும் எம் நாட்டை குறிவைப்பது “நியாயமற்ற, அடிப்படையற்ற மற்றும் பொருத்தமற்ற” நடவடிக்கை என விமர்சித்துள்ளது.
அறிக்கை
அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவின் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி மீது கூடுதல் வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் எண்ணெய் இறக்குமதி முடிவுகள் சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை 140 கோடி இந்திய மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் எடுக்கப்படுகின்றன,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பல நாடுகள் தங்கள் தேசிய நலன்களைப் பாதுகாக்க இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்தியா மீது மட்டும் அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க முடிவு செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இந்த நடவடிக்கைகள் நியாயமற்றவை, அடிப்படையற்றவை மற்றும் பொருத்தமற்றவை,” என இந்தியா குறிப்பிட்டுள்ளது.
மேலும், “இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்,” என இந்திய அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது.
இந்த மோதல், உலகளாவிய எரிசக்தி சந்தையில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பொருளாதார உறவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


