கானா நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஒமனே சுற்றுச்சூழல் அமைச்சர் இப்ராஹிம் முர்தலா உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம்

கானா நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து, அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் பயணம் செய்துள்ளனர்.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விழுந்து நொறுங்கியது. இதையடுத்து, வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில், கானாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா உட்பட 8 பேர் பலியானதாக, அந்நாட்டின் அரசின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
2021ம் ஆண்டில் ஒரு சரக்கு விமானம் அக்ராவில் ஓடுபாதையை மீறி பயணிகள் நிறைந்த பஸ்சின் மீது மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

