நிதி முறைகேடு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள (ஜனாதிபதியின் நீண்டகால நெருக்கமான தோழர்) அமைச்சர் குமார ஜெயக்கொடி என்ன முடிவு எடுக்க போகிறார்?

(DailyMirror செய்தியின் தமிழாக்கம் உவைஸ் மொஹிதீன்)
அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, 2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் நிதி முறைகேடு செய்ததாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) வழக்குத் தொடரத் தயாராகி வருவதால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
விஷயங்களை மோசமாக்கும் வகையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த நேர்காணலில் நீதிபதி ஒருவருக்கு எதிராக ஜெயக்கொடி கூறிய கருத்துக்காக, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் குழு அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரத் தயாராகி வருகிறது.
இரண்டு வழக்குகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஜெயக்கொடி கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
அமைச்சர் ஜெயக்கொடி ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு மிகவும் நெருக்கமானவர், மேலும் அவர் பல ஆண்டுகளாக ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். உண்மையில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் திசாநாயக்க விவசாய அமைச்சராக இருந்தபோது, அனுரகுமார திசாநாயக்கவால் அவர் உரக் கூட்டுத்தாபனத்திற்கு நியமிக்கப்பட்டார்.
அப்போதிருந்து ஜெயக்கொடி, திசாநாயக்கவுடன் நெருக்கமானவராக இருந்தார், மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜெயக்கொடி, திசாநாயக்கவின் பிரச்சாரத்தில் ஒரு வலுவான பங்கைக் கொண்டிருந்தார்.
இப்போது, 2015 ஆம் ஆண்டில் உரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்தபோது ரூ. 8 மில்லியன் மதிப்புள்ள நிதியை அவர் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஜெயக்கொடி பதவி விலகுவது நல்லது என்று நம்பிக்கைக்குரியவர்கள் சிலரால் ஜனாதிபதி திசாநாயக்கவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயக்கொடியை இதுவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்கவில்லை என்றாலும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஜனாதிபதி திசாநாயக்க காத்திருக்கிறார் என்று தெரிகிறது
இருப்பினும், தேசிய மக்கள் கட்சியின் மூத்த அமைச்சரவை அமைச்சர்களுடனான அவரது வாராந்த சந்திப்புகளில், விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, ஜெயக்கொடி விருப்பத்துடன் பதவி விலகுவது நல்லது என்று ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று இது தொடர்பான கருத்துகளை அறிய அமைச்சர் ஜெயக்கொடியைத் தொடர்பு கொள்ள எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தன, ஆனால் அமைச்சர் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க எந்த திட்டமும் இல்லை என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
இந்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சிகளே இந்த விஷயத்தை விட்டுவிட மாட்டார்கள். டெய்லி மிரர் பத்திரிகைக்கு கிடைத்த தகவலின்படி, ஜெயக்கொடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ITAK நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கோருவார் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒரு அமைச்சர் எவ்வாறு தொடர்ந்து பதவி வகிக்க முடியும் என்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவார்.
உரக் கூட்டுத்தாபனத்தில் நிதி மோசடி தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் இப்போது தேசிய மக்கள் கட்சியின் அமைச்சரவையில் உறுப்பினராக உள்ளார் என்று சானக்கியன் ஆறு மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

