தலைமறைவாகியுள்ள அத்துரலியே ரத்ன தேரரை கைது செய்ய கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்அத்துரலியே ரத்ன தேரரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு குற்றப்புலனாய்வுத் துறையின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு, அபே ஜனபல கட்சியின் செயலாளரான வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு, பயமுறுத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக ஆவணங்களில் கையொப்பம் பெறப்பட்டு, கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அத்துரலியே ரத்ன தேரர் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கௌரவ அத்துரலியே ரத்ன தேரரை கைது செய்ய, ராஜகிரியவில் உள்ள சந்தம்ம செவனவுக்கு பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சென்றுள்ளது. ஆனால், அந்த நேரத்தில் அத்துரலியே ரத்ன தேரர் அங்கு இல்லை, மேலும் அவரது கைபேசியும் செயலிழந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் அளித்த முறைப்பாட்டில், தம்மை கடத்திச் சென்று பயமுறுத்தி, வலுக்கட்டாயமாக பல ஆவணங்களில் கையொப்பம் பெற்று, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அத்துரலியே ரத்ன தேரர் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் கட்டுவன, கிரிமானகொட பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய நபர் ஆவார். விசாரணைகளில், இவர் முன்னர் கட்டுவன நந்தசீஹ தேரர் என்ற பெயரில் துறவியாக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்தை இவரும் மற்றொரு சந்தேக நபரும் இணைந்து நடத்தியதாக தெரிகிறது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் கைபேசி தரவுகளை ஆய்வு செய்தபோது, சம்பவம் நடந்த சமயத்தில் அத்துரலியே ரத்ன தேரருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே அசாதாரணமான அளவில் தொலைபேசி தொடர்புகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

