திருட வந்த நபர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் வாழைச்சேனை மீராவோடையில் பதிவு – பல பொருட்கள் முழுதாக சேதம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடையிலுள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (19) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ளோர் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீடு தீப்பற்றியதைக் கண்டு கூக்குரல் இட்டதைத் தொடர்ந்து அயலவர்கள் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஓட்டமாவடி – மீராவோடை – 4 ஆம் வட்டாரம் நூரானியா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு பகுதியளவில் தீப்பற்றியுள்ளது.
தீப்பரவலை அணைக்கச் சென்ற நபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டிலுள்ள மின்சாரப் பொருட்கள், தளபாடங்கள் பல தீயில் கருகியுள்ளன.
இந்தச் சம்பவம் திருடன் ஒருவனால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீட்டார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டில் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் திருடன் ஜன்னல் வழியாக வந்து அங்கிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் திருடன் வீட்டின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பொலித்தீன் வழியாக உட்செல்ல அதற்கு தீ வைத்ததில் இந்த சம்பம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தீப்பிடிப்பதை கண்டு வீட்டார் எழுந்த போது வீட்டிலிருந்து திருடன் ஓடிச் சென்றதை கண்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான் )