News

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள்  தமது எதிர்காலத்தை கவனமாக கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும் – ஜனதா விமுக்தி பெரமுன (JVP) சித்தாந்தங்களால் நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டுள்ளது ; ஜனாதிபதி

யானை சின்னத்திற்கு பதிலாக எரிவாயு சிலிண்டலை ஏன் தெரிவு செய்தேன் என்ற கேள்விக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.



அண்மையில் இடம்பெற்ற “ரணிலிடம் கேளுங்கள்” நிகழ்ச்சியின் போது சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.



இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,



மற்றவர்கள் தீர்க்கத் தவறிய பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக தீர்த்தாலும், தேவையான பொருளாதார மாற்றங்களை பாதியில் தடை செய்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது குடிமக்கள் தமது எதிர்காலத்தை கவனமாக கருத்திற் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

கடந்த 75 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சிக்கு முந்தைய தலைவர்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறுவது தவறானது என்றும் அவர் விமர்சனங்களுக்கு பதிலளித்தார். உள்நாட்டுப் பொருளாதாரத்திற்காக வாதிடும் ஜனதா விமுக்தி பெரமுன போன்ற சித்தாந்தங்களால் விரைவான பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட புதிய அணுகுமுறை தேவை என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்த முயற்சியில் கணிசமான மக்கள் தமக்கு ஆதரவளிப்பதாகவும் அதனால் தான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



யானைக்கு பதிலாக எரிவாயு சிலிண்டரை ஏன் சின்னமாக தேர்வு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்தேன். அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற கருத்து இன்று வலுவாக உள்ளது. இதனடிப்படையில் நமது அரசியல் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு குழுக்களுடன் இணைந்து பணியாற்றியதால், சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன். ஒரு சுயேச்சை வேட்பாளர் எந்த சின்னத்தையும் தேர்வு செய்யலாம், இந்த நேரத்தில் எரிவாயு சிலிண்டரே மிகவும் பொருத்தமான சின்னம் என்று நான் உணர்ந்தேன் எனத் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button