எமது அரசாங்கத்தில் மின் கட்டணம், எரிபொருள் விலை என்பன பாரியளவில் குறைக்கப்படும் ; அனுரகுமார
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை மாற்றி நாட்டைக் கட்டியெழுப்ப புதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்கமுவ நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2048 ஆம் ஆண்டில் இலங்கை அபிவிருத்தியடையும் என தற்போதைய ஜனாதிபதி கூறுகிறார்.
அதுவரையில் மக்கள் பட்டினியால் வாடியிருக்க வேண்டும் என்றா அவர் கருதுகிறார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் மின் கட்டணம், எரிபொருள் விலை என்பன பாரியளவில் குறைக்கப்படும்.
ஏனைய நாடுகளைப் போலவே மக்களுக்கு மிகச் சிறந்த நிவாரணங்கள் வழங்கப்படும்.
உணவு, கல்வி, சுகாதார சேவைகள் மீது விதிக்கப்படும் வரிகள் முழுமையாக நீக்கப்படும்.
எனவே தற்போதைய சூழ்நிலை மாற்றியமைக்கப்பட்டு, புதிய திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்