News

நாடாளுமன்ற வாழ்வில் மூன்று தசாப்தம் நிறைவு : முத்து விழா காணும் ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ) -ஓட்டமாவடி.
இலங்கை அரசியலில் மூத்த அரசியல்வாதி, சிறந்த இராஜதந்திரி, சர்வதேச அரங்கில் அறியப்பட்ட சிறுபான்மை இனத்தலைவரான கௌரவ ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்து முப்பது வருடங்களை பூர்த்தி செய்து முத்து விழா காண்கிறார்.

இலங்கையில் வாழும் சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரி பெற்றுக்கொடுத்த உரிமைக்குரலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களோல் அறிமுகமாகிய ரவூப் ஹக்கீம்,1988ம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தலைவர் அஷ்ரஃப்பின் வேண்டுகோள்களின்படி சிறப்பாகச்செயற்பட்டது மாத்திரமின்றி, கட்சி வளர்ச்சிப்பணிகளிலும் அயராது பாடுபட்டார்.

ரவூப் ஹக்கீமிடமிருந்த தலைமைத்துவ விசுவாசம், மும்மொழி அறிவு, துடிப்பான செயற்பாடு எனப்பல நற்குணங்கள் காரணமாக 1992ம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளின் போது அவர் தலைமைக்குப் பக்கபலமாகச் செயற்பட்டார்.

ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவ விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாக, அன்றைய தலைவரின் கூற்றை இங்கு பார்க்கலாம்.

“என்னுடைய ஓயாத அரசியல் வாழ்க்கையில், எனக்கு கிடைத்த ஆறுதல்களில் ஒன்று ரவூப் ஹக்கீம்” – எம்.எச்.எம்.அஷ்ரஃப்.

ரவூப் ஹக்கீமின் ஆளுமைப்பண்புகள், கட்சியின் செயலாளராக சிறப்பாகச்செயற்பட்டமை, கட்சி வளர்ச்சியில் அவரது பங்களிப்பு என்பவற்றோடு தலைமைத்துவ விசுவாசம் கருத்திற்கொள்ளப்பட்டதால்  1994ம் ஆண்டு ரவூப் ஹக்கீமின் 34வது வயதில் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்புரிமை அஷ்ரஃப்பினால் வழங்கப்பட்டது. அத்தோடு, பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித்தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

1999ம் ஆண்டு தலைவர் அஷ்ரஃப் தூரநோக்கோடு தேசிய ஐக்கிய முன்னணியை ஆரம்பித்தார். முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக இருந்த ரவூப் ஹக்கீமை அப்பதவியிலிருந்து அகற்றி, தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளராக பதவி மாற்றம் செய்தார். 

2000ம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி மரச்சின்னத்தில் பாராளுமன்றத்தேர்தலில் அஷ்ரஃப்பினால் ரவூப் ஹக்கீம் களமிறக்கப்பட்டார். வடக்கு, கிழக்கிற்கு வெளியே பிரதான அரசியல் நீரோட்ட தேசிய கட்சிகளில் அல்லாது ஒரு முஸ்லிம் கட்சியிலிருந்து ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றமை அதுவே முதல் தடவையாகும்.

2000ம் ஆண்டு பெருந்தலைவர் அஷ்ரஃப்பின் திடீர் மறைவைத்தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிக்குள் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரவூப் ஹக்கீம் மற்றும் பேரியல் அஷ்ரஃப் ஆகிய இருவரும் கட்சித்தலைமைத்துவத்திற்கு இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதன் பின், சிறிது காலத்திலேயே சில முரண்பாடுகள் ஏற்பட, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக பேரியல் அஷ்ரஃப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரவூப் ஹக்கீமும் நியமிக்கப்பட்டார்கள்.

2000ம் ஆண்டு ரவூப் ஹக்கீம், உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகம், முஸ்லில் சமய விவகாரங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக சந்திரிக்கா அம்மையாரின் தலைமையிலான அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார்.

2001ம் ஆண்டு மாவனெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்னணியில் அரசசார்பு அரசியல்வாதிகள் இருந்ததனை ஹக்கீம் வெளிப்படையாகவும் பலமாகவும் கண்டித்ததன் காரணமாக அமைச்சரவையிலிருந்து சந்திரிக்கா அம்மையார் ரவூப் ஹக்கீமை இரவோடிரவாக அதிரடியாக நீக்கினார். அதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதனால் சந்திரிக்கா அரசு பெரும்பான்மையை இழந்து தடுமாறி கவிழ்ந்தது.

2001ம் ஆண்டு ஒக்டோபரில்  ஐக்கிய தேசிய முன்னணியுடன் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டது. அதே ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கண்டியில் போட்டியிட்டு ரவூப் ஹக்கீம் மீண்டும் அங்கு வெற்றி பெற்றார்.

பாராளுமன்றத்தேர்தல் வெற்றியின் பின்னர் அமைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் துறைமுக அபிவிருத்தி, கப்பல்துறை, முஸ்லிம் விவகார மற்றும் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக அவர்  நியமிக்கப்பட்டார். 

2004ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் அதாவுல்லாஹ், ஹரீஸ், அன்வர் இஸ்மாயில் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி, சந்திரிக்கா அணியோடு இணைந்து ஒரு சவால்மிக்க சூழலை கிழக்கு அரசியலில் தோற்றுவித்த போதும், மிகவும் துணிச்சலோடு களத்தில் இறங்கிய ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு அமோக வெற்றியை ஈட்டி, மீண்டும் பாராளுமன்றத்திற்குத்தெரிவு செய்யப்பட்டார்.

இத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியை இழந்ததன் காரணமாக பங்காளிகட்சியான முஸ்லிம் காங்கிரஸும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

2007ம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு வழங்கப்பட்டது. அதே வருடம் டிசம்பர் மாதம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியது.

2008ம் ஆண்டு முதன் முதலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது.

அன்று ஹிஸ்புல்லாஹ் திடீரென கட்சி மாறியதால் உருவான சவால்மிக்க சூழலை தைரியமாக எதிர்கொண்ட தலைவர் ரவூப் ஹக்கீம், தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமாச்செய்து விட்டு திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால்  வெற்றி பெற்றார்.

கிழக்கு மாகாண சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு கைப்பற்றியதன் காரணமாக ரவூப் ஹக்கீம் மாகாண சபை உறுப்பினர் பதவியை விட்டு விலகி ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியலூடாக மீண்டும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.

2010ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டதன் காரணமாக நீதியமைச்சராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.

மகிந்த ராஜபக்ஷ அரசின் இனவாதச்செயற்பாடுகள் முஸ்லிம் சமுகத்தை மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கி இருந்ததனால் அரசுக்குள்ளிருந்து கொண்டே சமூகத்திற்கான போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்கின்ற சாணக்கியமான நகர்த்தல்களை மேற்கொண்டிருந்த ஹக்கீம், 2014ம் ஆண்டு இறுதிப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அன்றைய எதிரணி பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.

2015ம் ஆண்டு மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது. இதன் போது ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சரவையில் நகரத்திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக இருந்தார். அந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 52 நாள் அரசியல் குழப்பத்தின் பின்னர் ரவூப் ஹக்கீமுக்கு முன்னைய அமைச்சுக்களுடன் சேர்த்து உயர்கல்வியமைச்சும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமூகம் நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் போது அமைச்சுப்பதவிகளைத்துறந்து வெளியேறி துணிச்சலுடன் சவால்களுக்கு முகங்கொடுத்து வெற்றிகண்டவர் ரவூப் ஹக்கீம். 

ஆட்சியாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை அழிக்க அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்திய போது கட்சியை அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கோடு அரசாங்கத்தில் இணைந்து கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் அவற்றிற்கும் ரவூப் ஹக்கீம் முகங்கொடுக்க நேர்ந்தது.

2020ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சஜித் பிரமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டு முதன்மை வெற்றியாளராக வெற்றி பெற்றார். பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியைக்கைப்பற்றியதால், எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர், அவரின் மீதமான காலத்திற்கு ராஜபக்ஷ மொட்டு அணியினர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றப் பெரும்பான்மையூடாக நியமித்தார்கள்.

இதன் பின்னரான ஆட்சியில் நாட்டை வங்குரோத்து அடையச்செய்த ராஜபக்ஷ க்களையும், மொட்டு அணியினரையும் பாதுகாக்கும் நோக்கில் செயற்பட்டு நாட்டை சர்வதிகார போக்கில் கொண்டு சென்றமை, கட்சிகளை உடைத்து ஆள் பறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடல், தேர்தல்களை நடத்துவதில் கரிசணை காட்டாது, அவைகளை ஒத்திவைப்பதில் ஆர்வமாகச் செயற்பட்டமை போன்ற பல்வேறு காரணங்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியோடு இணைந்து பயணிப்பதைத் தவிர்ந்து கொண்டு, எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு, எந்த எதிர்க்கட்சித்
தலைவரும் முன்னெடுக்காத தேசத்தின் நலனுக்காக சுகாதாரம், கல்வி போன்ற விடயங்களில், மூச்சுத்திட்டம், பாடசாலைகளுக்கு பேரூந்து, நவீன வகுப்பறைகள் வழங்கும் திட்டம் எனப்பல்வேறு திட்டங்களை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச முன்னெடுத்துக் கொண்டிருப்பதாலும், அவரை பலப்படுத்தி நாட்டைக்கட்டியெழுப்பும் செயற்றிட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது.

இம்மாதம் 25ம் திகதி ரவூப் ஹக்கீம் தனது பாராளுமன்ற வாழ்வில் 30து வருடங்களைப்பூர்த்தி செய்து “முத்து விழா” காணும் சந்தர்ப்பத்தில், 30து வருட பாராளுமன்ற அனுபவத்தின் வெளிப்பாடாக இவ்வாறான தீர்மானங்கள் நோக்கப்படுகின்றன. By : எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ)
-ஓட்டமாவடி.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button