News

பாடசாலைக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்படும் அரசியல்வாதியை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி போராட்டம்   #நாவலப்பிட்டிய


நாவலப்பிட்டிய, தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்படும் அரசியல்வாதியை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வியாழக்கிழமை (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொலஸ்பாகை நகரில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து பல மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தொலஸ்பாகை நகரில் இருந்து குறுந்துவத்த, கம்பளை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து நீண்டநேரம் தடைபட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருடன், குறுந்துவத்த பொலிஸார் கலந்துரையாடி, முறைப்பாடுகளை பதிவு செய்து கொண்டனர். முறைப்பாட்டுக்கு அமைய உரிய வகையில் விசாரணை இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்துச்சென்றனர்.

குறுந்துவத்த, கங்கேஹியல பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு பாடசாலை காணியை, கையகப்படுத்த முற்படுகின்றார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த அரசியல்வாதி, பாடசாலை வளாகத்துக்குள் புதன்கிழமை (29) அத்துமீறி நுழைந்து வேலிகளை உடைத்தெறிந்துள்ளார். மாணவர்களால் வளர்க்கப்பட்ட பூக்கன்றுகளையும் பிடுங்கி வீசியுள்ளார் என பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பில் பாடசாலை அதிபரால் பொலிஸ் அவசர சேவை இலக்கம் ஊடாக, பொலிஸாருக்கு வியாழக்கிழமை (30) தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே மாணவர் மற்றும் பெற்றோரால் மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button